சென்னை: இந்தியில் சூப்பர் ஹிட்டான ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் இணைந்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாள்களுக்கு முன் பொள்ளாச்சியில் தொடங்கியது. இதையடுத்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் இன்று (ஏப். 19) கலந்துகொண்டார்.
முன்னதாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் மொத்த படக்குழுவும், மறைந்த நடிகர் விவேக்குக்கு படப்பிடிப்பு தளத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஆர்ட்டிக்கிள் 15' இந்தியா முழுக்க பெரும் பரபரப்பை கிளப்பியது. பல்வேறு விவாதங்களுக்கு உள்ளான இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் குறித்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே, படம் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்தப் படத்தை பிரபல பாடகரும், கனா படத்தின் இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.
சமீப காலங்களில் நடிகர் உதயநிதி அழுத்தமான கதைகளையும், சிறந்த கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பதுடன் ரசிகர்களிடம் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அத்துடன் அவர் படங்களுக்கு கிடைக்கும் நல்ல வரவேர்பு காரணமாக விநியோக தளத்திலும் மிகுந்த மதிப்பு இருந்து வருகிறது.
இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தை ரோமியா பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிக்கிறார். பே வியூ புரோஜக்ட் எல்எல்பி மற்றும் ஸீ ஸ்டுடியோ நிறுவனங்கள் படத்தை இணைந்து வழங்குகின்றனர். இந்த நிறுவனங்கள் தமிழில் தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளனர்.
ஆர்ட்டிக்கிள் 15 ரீமேக் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'வலிமை' படத்தை தற்போது தயாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கோடையில் ரசிகர்களை சூடாக்கிய திஷா பதானியின் மாலத்தீவு புகைப்படம்!