இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்திருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கடந்த வெள்ளிகிழையன்று (மார்ச் 29) வெளியான இப்படம், கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கை வேடத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து திருநங்கை செயற்பாட்டாளர் பிரியா பாபு தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
- ரசிகர்கள் கைத்தட்ட வேண்டும் என்பதற்காக இதுவரை ஏற்றிராத கதாபாத்திரமான திருநங்கை வேடத்தை ஏற்று நடித்துள்ளார் விஜய்சேதுபதி. இதுதான் இந்த படத்தின் வியாபாரத்திற்கான படைப்பு. ஆனால் திருநங்கையர் குறித்த எந்த விதமான புரிதலும் இன்றி விஜய்சேதுபதி ஆணாக இருக்கும் போது திருமணம் நடந்து, குழந்தை பிறந்து. பின் திருநங்கையாக மாறுவார் என யார் உங்களுக்கு சொன்னது?
- குழந்தை பருவத்தில் இருந்தே துவங்கும் பாலியல் மாறுபாடுகள் வளரிளம் பருவத்தில் வெளிப்படுகையில் சமூகத்தின் அனைத்து கட்டுகளையும் உடைத்தெறிந்து தான் உணர்ந்த பெண்மை உணர வேண்டி பெண் உரு கொண்டு ஆண் அடையாளங்கள் துறந்து, ஆண்குறி அறுத்தெறிந்து பெண்ணாகிப் போகிறோம். ஆனால் நீங்கள் என்ன புரிதலோடு காட்சிப்படுத்தியுள்ளீர்கள்?
- விஜய்சேதுபதி (சில்பா) தலை வழுக்கையாக காண்பித்து அதில் விக் மாட்டுவதாக காட்சிப்படுத்துதலில் உள்ள வன்மம் ஏன்?
- திருநங்கையர் இன்று பல்துறைகளில் தங்கள் இருப்பை இருத்தி வருகின்றனர். 20ரூபாய் நோட்டை யாசகம் கேட்டு வாங்கி அதை பெருமையாக சாதனையாக காட்சிப்படுத்தியதை எப்படி எடுத்து கொள்வது?
- ஒரு முறை அத்தனை வல்லுறவு செய்த காவல்துறை அதிகாரியை "அவரு என் புருஷன்" என்று சில்பா சொல்வது தங்கள் மீது ஏவப்படும் அத்தனையும் துடைத்தெறிந்து ரோஷமற்ற பிண்டங்களாக வாழ்பவர்கள் திருநங்கையர் என பொருத்தப் பார்கிறீர்களா?
இவை கேள்விகள் அல்ல குமுறல்கள். இன்று விஜய்சேதுபதி நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு வேறு யார் நடித்திருந்தாலும் பலமான எதிர்ப்பு கிளம்பியிருக்கும். இங்கு பிம்ப சினிமா அரசியல் பலரை மௌனமாக்கி விட்டது என்று தனது பதிவில் கூறியுள்ளார்.