நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனும், நடிகருமானவர் சாய் தரம் தேஜ். இவர் தெலுங்கில் சுமார் 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவர் நேற்று (செப். 10) ஹைதராபாத்தில் உள்ள மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் அதிவேகமாகச் சென்றார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து, சுயநினைவை இழந்தார்.

இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை உடனே மீட்டு ஹைரெக் சிட்டியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இவரது உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாய் தரம் தேஜ் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்.
அவரது தலை, கை என சில இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இவரது உடல்நிலை குறித்த அடுத்த அறிவிப்பு இன்று (செப். 11) காலை வெளியிடப்படும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து ஹைதராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.