பிரபல தெலுங்கு நடிகரும், நடிகர் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில், 'எனக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது உடல்நிலை குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்' எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்கு முன்பு பரிசோதனை செய்தபோது சிரஞ்சீவிக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அறிகுறிகள் இல்லாததால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
தற்போது குணமடைந்து நலமாக உள்ளார். சமீபகாலமாகப் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளும் திரையுலக பிரபலங்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்துவருகிறது.