தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படம் மூலம் அறிமுகமானவர் பா.இரஞ்சித். இப்படத்தை தொடர்ந்து, தலித் அரசியலை வலுவாக பேசிய மெட்ராஸ் படம் எடுத்தார். இதையடுத்து, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியை வைத்து கபாலி, காலா என்று அடுத்தடுத்து படங்களை இயக்கி இந்திய அளவில் கவனம் பெற்ற இயக்குநரானார்.
இயக்கம் மட்டுமின்றி பரியேறும் பெருமாள் எனும் படத்தை தயாரித்தார். இப்படமும் மக்களிடையே பலத்த வரவேற்பும், விருதுகளையும் குவித்தது. தற்போது இரண்டாம் உலகப்போரின் கடைசிக் குண்டு உட்பட இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். மேலும், ஆர்யா, சத்யராஜ் உட்பட மல்டி ஸ்டார் படத்தை இயக்குவதற்கு ஆயுத்தமாகி வருகிறார்.
இந்நிலையில், பிரபல திரைப்பட இயக்குனர் பா.இரஞ்சித்தின் தந்தை பாண்டுரங்கன் (63). கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரது உடல், திருவள்ளூர் மாவட்டம், கரலப்பாக்கத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் ஆர்யா, தினேஷ், கலையரசன், லிங்கேஷ், இயக்குநர் லெனின் பாரதி, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.