ஞானவேல் இயக்கத்தில் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா (Suriya) நடிப்பில் வெளியான படம் 'ஜெய் பீம்' (Jai Bhim). படத்திற்கு ஒரு பக்கம் பாராட்டு கிடைத்தாலும், மறுபக்கம் இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவாகக் காண்பித்திருப்பதாக பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். மேலும் இதற்குப் படக்குழுவினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும், ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் எனவும் சூர்யாவுக்கு, வன்னியர் சங்கம் (Vanniyar Sangam) சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதற்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சூர்யாவுக்கு ஆதரவாக, அன்புமணி ராமதாஸுக்கு (anbumani ramadoss) கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், "அன்புமணி ராமதாஸுக்கு வணக்கம்! உங்களின் சமூகப் பங்களிப்பு நாடறிந்ததே. திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இன்று குறைந்திருப்பதற்குக் காரணம் உங்களது சமூக அக்கறையால்தான். அதற்கு எங்களின் நன்றி.
தாங்களும், தங்களின் தந்தையாரும் தாங்கள் சார்ந்த சமூகத்திற்கு மட்டுமல்லாமல் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பல சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முன்னின்று குரல் கொடுத்தவர்கள்.
நீங்கள் கொடுத்த குரலைத் தான் 'ஜெய் பீம்'
எல்லாவற்றுக்கும் மேலாகச் சாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்துச் சமூகங்களையும் ஒருங்கிணைந்து தமிழனாக நீங்கள் பார்த்த பார்வையில் தமிழ்ப் பற்றையும், உணர்வையும் அறிந்தவர்கள் நாங்கள். அடித்தள மக்களுக்கு நீங்கள் கொடுத்த குரலைத்தான் இன்று 'ஜெய் பீம்' திரைப்படமும் கொடுத்திருக்கிறது.
சமூக அக்கறையோடும், சமூக அவலங்களின் பிரதிபலிப்பாகத்தான் பெரும்பாலும் நம் திரைப்படங்கள் இருந்துவருகிறது. அப்படிப்பட்ட படம்தான் இந்த ஜெய் பீம். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் சமூகநீதி காக்க உருவான படம்தான் இது.
உணர்வுக்கு மதிப்பு
பட்டுவேட்டியில் ஒரு புள்ளியளவு கறைபோல் ஏதேச்சையாக அல்லது தவறுதலாக உங்கள் சமூக குறியீடு ஒரு காட்சியில் வந்துவிட்டது. அது மிகவும் வருந்தத்தக்கது. அதை நீங்கள் சுட்டிக்காட்டியதும் உங்கள் உணர்வுக்கும் மதிப்பளித்து உடனே அந்தக் குறியீடு நீக்கப்பட்டது. பிறகு சூர்யாவிடம் நீங்கள் நாகரிகமாகக் கேட்ட கேள்விகளுக்கு, சூர்யா நாகரிமாக பதில் அளித்துள்ளார்.
ஏழை மாணவர்களின் கல்விக்காக சூர்யா செய்யும் சேவையை உங்களைப் போல் நாடும் நன்கறியும். உங்களின் நோக்கமும், சூர்யாவின் நோக்கமும் ஏறக்குறைய ஒன்றுதான். விபத்தாக ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. ஒடுக்கப்பட்ட சாதிக்கு குரல் கொடுக்கும் அவருக்கு ஒருபோதும் குறிப்பிட்ட ஒரு சாதியை அவமதிக்கும் நோக்கம் இருக்க வாய்ப்பே இல்லை. இதை நாங்கள் நன்கறிவோம்.
சமூக அக்கறையுள்ளவர்
சூர்யா வெறும் ஒரு நடிகர் என்றிருந்தால் எங்கள் ஆதரவு குரல் ஒலித்திருக்காது. ஆனால் அவர் சமூக அக்கறையுள்ளவர், ஏழைகளின் கல்விக் கண்ணுக்கு, கருணைப் பார்வையாய் ஒளிர்கின்றவர். அதனால்தான் அவர்மீது எந்தத் தவறும் இருக்காது என்ற நம்பிக்கையில் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிறோம்.
கோபம் பாசமாக மாறும்
நீங்கள் உணர்வுமிக்கத் தமிழன் சூர்யாவை தமிழனாகப் பாருங்கள். உங்கள் சகோதரனாகப் பாருங்கள். அப்போது உங்கள் கோபம் பாசமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை தமிழர்களாகிய எங்களுக்கு உண்டு. திரையில் படைப்புச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், இரண்டும் முக்கியத்துவம் வாய்ந்ததே.
அதில் தெரியாமல் ஒரு தவறு நடந்தால் நட்பு ரீதியாக அதைத் தீர்த்துக்கொள்வதே ஆரோக்கியமாக இருக்கும். எங்கள் நேசக்கரம் திட்டுகிறோம், உங்கள் பாசக்கரத்தால் கை குலுக்குங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Jai Bhim Controversy: ஜெய் பீம் பட விவகாரம் - சூர்யா மீது வன்னியர் சங்கத்தினர் புகார்