நடிகர் நிவின் பாலி நடிப்பில் இயக்குநர் ராஜீவ் ரவி இயக்கும் புதிய படமான 'துறைமுகம்' படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கியது. இப்படம் கன்னூரிலும் கொச்சியிலும் படமாக்கப்பட்டது. துறைமுக பகுதியை ஒட்டியுள்ள மக்களின் வாழ்க்கையை பற்றிய படம் இது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நிமிஷா சஜயன் நடிக்க உள்ளார். மேலும் இவர்களுடன் பிஜு மேனன், இந்திரஜித், அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வெகு நாட்களுக்கு பின் பூர்ணிமா இந்திரஜித் இப்படத்தின் மூலம் மலையாள திரைக்கு திரும்புகிறார்.
கொச்சின் துறைமுகத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் இப்படம், ‘சப்பா’ முறைக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சிகளை பற்றியது என படக்குழு கூறியுள்ளது. அதாவது 1940, 1950 களில் துறைமுகத்தில் வேலை செய்ய காத்திருக்கும் தொழிலாளர்கள் முன்பு செப்பு நாணயங்கள் எறியப்படும் அதை எந்த தொழிலாளர் கைப்பற்றி வருகிறாரோ அவரே துறைமுகத்தில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார். இந்த மனிதாபிமானமற்ற செயலை சப்பா என அழைப்பர்.
எழுத்தாளர் கேஎம் சிதம்பரம் எழுதிய துறைமுகம் புத்தகத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. தற்போது செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வாயில் எரியும் பீடியுடன், நிவின் பாலியின் அச்சுறுத்தும் தீவிரமான தோற்றம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது படம் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இப்படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவின் பாலி பட ஷுட்டிங் ஸ்பாட்டில் திருட்டு - என்ன திருடப்பட்டது தெரியுமா?