பிஆர் ராஜசேகர் கதை, திரைக்கதை எழுதி தயாரித்துள்ள படம் கோசுலோ. இந்தப் படத்தை இயக்குநர் சந்திரகாந்தி இயக்கியுள்ளார். இந்தப் படத்தை தமிழில் ஆக்ஷன் ரியாக்ஷன் நிறுவனம் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ள இந்தப் படம் கதையின் தன்மை கருதி தமிழில் கோசுலோ என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் சுதாராணி பல வருடங்களுக்கு முன் தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர். இவர் 25 வருடங்களுக்குப் பிறகு கோசுலோ படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார்.
மேலும் கன்னட திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவரும், சமூக ஆர்வலருமான சுரேஷ் ஹெப்லிகர் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய முயற்சியாக மூன்று மொழிகளுக்கும் ஓப்பனிங், கிளைமாக்ஸ் ஆகியவை மட்டும் ஒரே மாதிரியாகவும், உள்ளே நடக்கும் கதை வேறு மாதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் சைகாலஜிகல் திரில்லராக உருவாகியுள்ளது. ஒரு மலைப் பிரதேசத்திற்கு ஒரு வயதான தம்பதி, ஒரு நடுத்தர வயது ஜோடி, ஒரு இளைஞன் ஆகியோர் வருகின்றனர். அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதை அவர்கள் எப்படி சமாளிக்கின்றனர் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.