அமெரிக்காவை சேர்ந்த பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க், “theaterhoods.com” (தியேட்டர்ஹுட்ஸ்.காம்) என்ற புதிய ஓடிடி தளத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது.
இதுகுறித்து இந்திய மண்டல மார்க்கெட்டிங் தலைவர் பிரசாத் வசீகரன் பேசுகையில், "இந்திய சினிமா ரசிகர்களை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். சினிமா நம் வாழ்க்கையின் ஒரு பகுதி, நமது ரத்தத்தில் கலந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இலவச டிக்கெட்
எங்கள் பயனர்கள் ஒவ்வொரு நொடியும், அவர்கள் விரும்பும் முறையில் உள்ளடக்கத்தை ரசிக்க செய்வதே எங்கள் முதன்மையான குறிக்கோள் ஆகும். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழி உள்ளடக்கம், ஆயிரத்திற்கும் அதிகமான அசல் திரைப்படங்கள், தொடர்களை நாங்கள் தரவிருக்கிறோம்.
எனவே பார்வையாளர்கள் எங்களை நிச்சயம் வரவேற்பார்கள் என நம்புகிறோம். இப்போது ஒரு சில திரைப்படங்களே ஓடிடி தளங்களில் நேரடியாக திரையிடப்படுகின்றன. பெரிய திரைப்படங்கள் திரையரங்குகளில்தான் முதலில் வெளியாகின்றன. ஓடிடியில் பார்க்க சினிமா ரசிகர்கள் 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
இதுதவிர சினிமா தியேட்டரில் புதிய திரைப்படத்தை ரசிக்கும் அனுபவமே தனி. இந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம். திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கு இந்தியா முழுவதும் இலவச டிக்கெட்டுகளையும், எங்கள் தியேட்டர்ஹுட்ஸ் தளத்தில் அளவில்லா திரைப்படம் பார்க்கும் அனுபவத்தையும் நாங்கள் வழங்கவுள்ளோம்.
ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் தின விருந்தாக இந்தியா, வெளிநாட்டில் இந்த தளம் செயல்பாடுகளை தொடங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ஓடிடி தளம் செயல்படவுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பீஸ்ட் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவு