கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் இந்தியன். 1996ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் பொறுப்பற்ற இளைஞன், தேசப்பற்று மிக்க முதியவர் என இரு கதாபாத்திரங்களில் நடித்து கமல் அசத்தியிருப்பார். இந்தப் படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருப்பார். இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்ட ஷங்கர், லைகா தயாரிப்பு நிறுவனத்தின் உதவியுடன் படத்தைத் தொடங்கினார்.
கமல்ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே லைகா நிறுவனம் தயாரிப்பு பணியில் இருந்து விலகியது. சொன்ன பட்ஜெட்டை விட அதிகமான பணம் செலவாகும் என்பதால் லைகா நிறுவனம் இதில் இருந்து ஒதுங்கியது. கமல்ஹாசனும் இந்த இடைவேளையில் தனது அரசியல் பணிகளை செய்ய கிளம்பிவிட்டார். தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தைத் தொடங்கி ஷங்கர் முடிவுசெய்துள்ளார்.
ரிலையன்ஸ், சன் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள்தான் ஷங்கரின் டார்கெட். ரிலையன்ஸ் நிறுவனத்தை அணுக ஏ.ஆர். ரஹ்மான் உதவ இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் 2 படத்தின் கதாபாத்திரங்கள், கதையின் சிறப்பம்சம் குறித்து விரிவாக இவ்விரு நிறுவனங்களுக்கும் ஷங்கர் அனுப்பிவைத்துள்ளார். இந்தப் படத்தை யார் தயாரிக்கப் போகிறார்கள் என வெகு விரைவில் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.