சர்ரியலிசம் (surrealism) என்ற சொல்லின் பொருளை ஒரு வலைதள விரிவாக்கத்தில் அடைத்துவிட முடியாது. ஒரு புரிதலுக்காக நம் ஆழ்மனத்தில் தோன்றுவதை அப்படியே திரையில் காட்டும் முறையே சர்ரியலிசம் என வைத்துக்கொள்வோம். இதனைப் பல்வேறு இயக்குநர்கள் தங்கள் திரைப்படங்களின் மூலமாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவுள்ளனர்.
இவற்றுக்கு உதாரணமாக டேவிட் லின்ச் இயக்கிய 'The Mullholland Drive', தெர்ரி கில்லியம் இயக்கிய ‘Fear and loathing in las vegas', ஸ்டான்லி குப்ரிக் இயக்கிய ‘The Shinning' போன்ற திரைப்படங்களைக் கூறலாம். மேற்கண்ட திரைப்படங்களில் சர்ரியலிசமானது ஆங்காங்கே கையாளப்பட்டிருக்கும்.
இப்புதிர் உலகுடன் நம் தொடர்பு
இதற்கு மாறாக ஒரு முழுநீளத் திரைப்படமான - சர்ரியலிசமை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது The holy Mountain (தி ஹோலி மவுண்டெய்ன்). இத்திரைப்படத்தின் இயக்குநர் அலஜெண்டாரோ ஜொடொரொஷ்கி, அடிப்படையில் ஒரு சர்ரியல் நாடக எழுத்தாளராவார்.
ஆரம்ப காலத்தில் இவர் பல நாடகங்களை சர்ரியல் பாணியில் மேடைகளில் அரங்கேற்றியுள்ளார். இம்முறையை நாடகத்தில் அரங்கேற்றுவது சாத்தியப்படாது என்பது ஜொடொரோஷ்கிக்கு மட்டும் விதிவிலக்கு.
"ஒருவன் திரையரங்கில் அவனை மறக்கவோ அல்லது பொழுதை போக்கவோ செல்வதாக இருக்கக் கூடாது, மாறாக இந்தப் புதிர் உலகுடன் உள்ள நம் தொடர்பை தேடிச் செல்லுமிடமாகத் திரையரங்குகள் இருக்க வேண்டும்" என்பது அவரின் பிரபலமான பொன்மொழி.
வழக்கமான இலக்கணங்களுக்குள் அடங்காது
1973ஆம் ஆண்டு, தி ஹோலி மவுண்டெய்ன் திரைப்படமானது ஸ்பானிஷ் மொழியில் வெளிவந்தது. தற்போது வெளிவரக்கூடிய வழக்கமான திரைப்பட இலக்கணங்களுக்குள் இத்திரைப்படமானது அடங்காது.
இதில் முதலாளித்துவம், கிறிஸ்தவம், போர், காலனித்துவம் உள்ளிட்டவை மிக நுட்பமான முறையில் அணுகப்பட்டிருக்கும். படத்தைப் பார்க்கும்போது வாழ்க்கை முறை, பரிணாமம், கலாசாரம் போன்றவை குறித்து நமக்குள்ளேயே பல கேள்விகள் எழும்.
இவை அனைத்தையும் பரப்புரைபோல் இல்லாமல், உளவியல் ரீதியாக அணுகி திரையில் மிளிரச் செய்திருப்பார் ஜொடொரொஷ்கி. இத்திரைப்படமானது ஜொடொரொஷ்கியின் படைப்புகளிலேயே ஒர் சிறந்த படைப்பு எனப் பலராலும் இன்றளவும் போற்றப்படுகிறது.
ஜொடொரொஷ்கியின் கண்ணீர்
இவர் இயக்குவதாக இருந்து பின்னர் கைவிடப்பட்ட 'The Dune' திரைப்படமானது, ஒரு வேளை வெளியாகியிருந்தால் சிறந்த படைப்பாகத் திகழ்ந்திருக்கும் எனவும் பலரும் தெரிவிக்கின்றனர்.
தனது கைவிடப்பட்ட திரைப்படம், தி ஹோலி மவுண்டெய்ன் படப்பிடிப்பின் சுவாரஷ்ய சம்பவங்கள் உள்ளிட்டவற்றை, தனது 'jodorowsky's Dune' என்னும் ஆவணப்படத்தில் அழகுபடக் கூறியிருப்பார் இயக்குநர். ஆவணப்படத்தின் இறுதியில் கைவிடப்பட்ட திரைப்படம் குறித்த ஜொடொரொஷ்கியின் கண்ணீர் காண்போரையும் தொற்றிக்கொள்ளும்.
வாய்ப்பிருந்தால் பாருங்களேன்! புதிய அனுபவம் கிட்டலாம்...
இதையும் படிங்க: டான் படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு