அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'பிகில்'. இதில் யோகி பாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இதிலிருந்து ‘சிங்கப் பெண்ணே’, ‘வெறித்தனம்’ என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'உனக்காக' பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விஜய் பேசுகையில், "வாழ்க்கைகூட கால்பந்து மாதிரிதான். நாம ஒரு கோல் போட ட்ரை பண்ணுவோம். ஆனா, அதை தடுக்க நிறைய போ் வருவாங்க. இதுல சேம் சைட்லயே ஒருத்தன் எதிர் டீமுக்கு கோல் அடிப்பான். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கே உட்கார வைத்தீர்கள், என்றால் எல்லாம் சரியாக இருக்கும்.
வாழ்க்கையில அவங்க மாதிரி, இவங்க மாதிரி வரணும்னு ஆசைப்படாதீங்க. அதுக்குதான் அவங்களே... இருக்காங்களே. நீங்க நீங்களா வாங்க" என்றார்.
மேலும், தொடர்ந்து பேசிய அவர், "பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல்! இதுபோன்ற சமூக பிரச்னைக்கு ஹேஷ்டேக் போடுங்க. சமூக பிரச்னைல கவனம் செலுத்துங்க.
அரசியலில் புகுந்து விளையாடுங்க. ஆனால் விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. பேனர் கட்-அவுட்லாம் கிழிச்சப்போ நானும் ரசிகர்கள் வருத்தப்பட்ட அளவு வருத்தப்பட்டேன். என் போட்டோவ கிழிங்க. உடைங்க. ஆனா என் ரசிகர் மீது கை வைக்காதீங்க"' என்றார்.