’கைதி’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் ‘தளபதி 64’. இதில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஷ், சாந்தனு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் இத்திரைப்படம் கமல்ஹாசனின் ‘நம்மவர்’ ரீமேக் என தகவல்கள் வெளியானது.
1994ஆம் ஆண்டு வெளியான ‘நம்மவர்’ திரைப்படத்தில் கமல்ஹாசன், கல்லூரி பேராசியராக நடித்திருந்தார். கல்லூரியில் உள்ள ஒரு அடாவடி கும்பல் அவரை வம்பிழுக்கவே, அவர் ஒரு காலத்தில் ரவுடியாக இருந்தவர் என்பது தெரியவரும். தற்போது விஜய் நடித்துவரும் ‘தளபதி 64’ கதையும் இதுபோன்றதுதான் என தகவல்கள் வெளியாகின. ‘நம்மவர்’ கதை உரிமையை பெறுவதற்காக ராஜ் கமல் நிறுவனத்துக்கு, லோகேஷ் ஒரு படம் பண்ண ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுகுறித்து ‘தளபதி 64’ படக்குழுவின் நெருங்கிய வட்டாரம், இந்தக் கதை முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜால் உருவாக்கப்பட்டது. எந்தக் கதையின் தழுவலும் அல்ல என கூறுகிறது.
‘தளபதி 64’ படம் குறித்து இப்படியான வதந்திகள் பரவக் காரணம், கல்லூரி வளாகத்தினுள் ஐடி கார்ட் அணிந்து விஜய் நிற்பது போல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் உலா வந்ததே ஆகும்.
இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரம் முதல் நட்சத்திரம் வரை: குழந்தைகள் தின ஜாலியான புகைப்படத் தொகுப்பு!