சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு ’தலைவி’ திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடித்துள்ளனர். படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தம்பி ராமையா, "இந்தப் படம் நூற்றில் ஒன்று இல்லை, நூற்றாண்டில் ஒன்று. பெண்ணாகப் பிறந்து சினிமா, அரசியல் இரண்டிலும் ஜாம்பவனாக இருந்தவர் ஜெயலலிதா. இந்திரா காந்தி, மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, மாயாவதி ஆகிய நான்கு பேரையும் ஒன்று சேர்த்தவர்தான் கங்கனா. மேலும், எம்ஜிஆர் கதாப்பாத்திரத்தில் அரவிந்த் சாமியைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. நானும் இந்தப் படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய சமுத்திரக்கனி, "இந்தப் படத்தில் நடித்தது என் பாக்கியம். இந்தக் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா என்று நினைத்தேன், நடித்திருக்கிறேன், உங்களைப் போல நானும் படத்தைப் பார்க்க வேண்டும் என்று காத்து இருக்கிறேன். நான் எம்ஜிஆரை சினிமாவில்தான் பார்த்து இருக்கிறேன். இந்த படத்தின் மூலம் 40 நாள் அவருடன் நடித்து இருக்கிறேன். ஜெயலலிதாவின் ஆத்மா கங்கனா உள்ளே வந்து நடித்தது போல் இருந்தது அவரின் நடிப்பு" என்றார்.
"தலைவி படம் வெளி வந்த பிறகு நிச்சயம் நிறைய விருதுகள் கிடைக்கும். தேசிய விருது பெற்ற வெற்றி மாறன், தனுஷ் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள். மேலும், பின்னணி இசைக்கு அசுரனுக்கு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் கிடைக்கவில்லை. அது கவலையாக உள்ளது" என மதன் கார்க்கி பேசினார்.
"கடல் போன்ற ஒன்றை எப்படி படமாக்க என்று நினைத்தேன், ஆனால் முடியும் என்று தயாரிப்பாளர்கள் கூறினார்கள்” என விழாவில் பேசிய இயக்குநர் விஜய், "இதை ஒரு அரசியல் படமாக மட்டும் நாங்கள் எடுக்கவில்லை. ஆண் ஆதிக்கம் நிறைந்த உலகில் ’தலைவி’ குறித்த கதையை படமாக எடுத்திருக்கிறேன். மேலும், படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.
இங்கு தமிழ் சினிமாவில் எந்த குரூப்பிசமும் நெப்போடிசமும் இல்லை. நான் வெளியில் இருந்து இங்கே வந்துள்ளேன். என்னை நன்றாக ஊக்கப்படுத்தினர். தமிழில் மேலும் நிறைய படங்கள் செய்ய உள்ளேன். அதோடு பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும், ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு கொடுக்கப்பட்டது இல்லை. ஆனால், தலைவி படத்தில் இயக்குநர் விஜய் என்னை மரியாதையுடன் நடத்தினார்" எனப் பேசி மேடையிலேயே கங்கனா கண் கலங்கினார்.
இதையும் படிங்க: 'தலைவி' ட்ரெய்லர்: 'ஜெயா உங்களுடையவள்' - கங்கனா ட்வீட்