சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்டு வெளிவந்துள்ளது தலைவி திரைப்படம். ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி, சமுத்திரக்கனி, நாசர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
விஜயேந்திர பிரசாத் மற்றும் விஜய் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு என கூறி எடுக்கப்பட்ட இப்படம் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் இடையேயான மென்மையான காதலை பற்றி பேசுகிறது. முதல் பாதி இருவருக்கும் இடையேயான காதல், பாசம், பிரிவு என செல்கிறது.

இரண்டாம் பாதியில் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம், எம்ஜிஆர் மறைவு, ஜெயாவின் முதல் வெற்றி, முதல்முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்று சட்டப்பேரவை செல்வது என விரிகிறது. எம்ஜிஆரின் வற்புறுத்தலால் அரசியலில் நுழைந்து பின் எல்லோருக்கும் அம்மா ஆனதை வரலாற்றின் சில உண்மை பக்கங்களை அவசர அவசரமாக திருப்பிப் பார்த்து இப்படத்தை எடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் தனது அபார நடிப்பால் ஜெயலலிதாவை கண்முன் கொண்டுவந்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த்சாமி மேக்கப்பில் ஈடுகட்ட நினைத்தாலும் நடிப்பில் சிறப்பாக செய்துள்ளார். இருவரையும் கடந்து ரசிக்க வைப்பவர் ஆர்எம்வியாக நடித்து இருக்கும் சமுத்திரக்கனி. ஜெயலலிதாவின் வரவு எப்படி எம்ஜிஆருக்கும் தனக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கிற காட்சியிலும், எம்ஜிஆர் மறைவுக்குப்பின் கட்சியை காப்பாற்ற ஜெயலலிதாவிடம் சென்று பேசும் காட்சியிலும் மிளிர்கிறார். ஒட்டுமொத்த படத்திலும் சிக்ஸர் அடிப்பது சமுத்திரக்கனிதான். மதன் கார்க்கியின் வசனங்கள் படத்தின் தூணாக உள்ளது. ஜிவி பிரகாஷின் இசை சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளது.

இதையும் படிங்க: ஓடிடி தளத்தில் வெளியான டிக்கிலோனா!