சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி வில்லன் கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இதனிடையே ரஜினியின் அடுத்த படமான 'தலைவர் 168' படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ், ஜார்ஜ் மர்யன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'தலைவர் 168' படத்திற்கு இமான் இசையமைக்கிறார். வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கும் வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த நிலையில், ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினி சமீபகாலமாக இளம் இயக்குநர்களின் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்துவரும் நிலையில், 'தலைவர் 169' படத்தை இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அல்லது கௌதம் மேனன் இயக்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' திரைப்படம் வசூல் சாதனை படைத்து வெற்றியடைந்த நிலையில், விஜய் நடிப்பில் 'மாஸ்டர்' திரைப்படத்தை அவர் இயக்கிவருகிறார்.
இந்தப்படம் வரும் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜினி-லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமையலாம் எனக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவரும் நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.