'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து தல அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடித்துவருகிறார். 'வலிமை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஸ்பெயினில் நடத்த முடிவு செய்தனர். இதற்கிடையில் கரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
வலிமை படத்தில் தல அஜித்துடன், ஹூமா குரேஷி, யோகி பாபு, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் பிரதான கேரக்டர்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு - நிரவ் ஷா. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்த பிறகு ஒரு சுவாரசியமான விஷயம் நடந்துள்ளது. அது ஒரு மாதம் கழித்து தற்போது வெளியாகியுள்ளது.
என்னவென்றால் ஹைதாராபத்தில் வலிமை படத்திற்காக அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதன் இறுதி நாளில் காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிந்தவுடன் சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டிருந்தது.
அப்போது அஜித் நான் சென்னைக்கு இந்த பைக்கிலேயே செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார். அப்போது அஜித்தின் உதவியாளர்கள் படப்பிடிப்பு முடிந்து விட்டதால் பேக்கிங் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
யாரும் இல்லாமல் தனியாக செல்கிறாரே என்றவுடன், கையில் பணம் இருக்கிறதா என்று அஜித்திடம் கேட்டதற்கு பெட்ரோல் போடும் அளவுக்கு பணம் இருக்கிறது அது போதும் என்று செல்லியிருக்கிறார். இது குறித்து அவரது உதவியாளர்கள் அறிந்ததும் அவரது பின்னாலேயே கிளம்பி வந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட ஒரு மாதம் ஆனாலும் இப்போது தான் தெரியவந்துள்ளது.
பைக் ரைடில் ஆர்வம் உள்ள அஜித் ஹைதாராபாத்தில் இருந்து சென்னை கிட்டதட்ட 650 கி.மீ தூரம் அஜித் பைக்கில் கடந்து வந்திருப்பது அவரது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.