சென்னை: தல அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' பட வில்லன்களில் ஒருவராக தோன்றிய நடிகர் சுஜித் ஷங்கர் திருநங்கையாக நடித்துள்ளார்.
மலையாள நடிகரான இவர், மேடை நாடகங்களின் தோன்றி பின்னர் திரையில் நடிக்க வந்துள்ளார். 10க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ள சுஜித், தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.
இதையடுத்து மலையாளத்தில் உருவாகியுள்ள 'மூத்தோன்' என்ற படத்தில் திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார். அண்ணனை தேடிச் செல்லும் தம்பி சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து தயாராகியிருக்கும் இப்படத்தின் மேக்கிங் சிறப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான 'மூத்தோன்' ட்ரெய்லர், படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிலீசுக்கு முன்பே பல்வேறு உலகத் திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டதுடன், விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது.
இந்த நிலையில், 'நேர்கொண்ட பார்வை'யில் வில்லனாக படத்தின் நாயகிகளை மிரட்டிய சுஜித் ஷங்கர் 'மூத்தோன்' படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார். ட்ரெய்லரில் ஒரு காட்சியில் சேலை கட்டி, முழு மேக்கப்புடன் பெண் வேடத்தில் நடனமாடும் இவர், அடையாளமே தெரியாதவாறு இருக்கிறார்.
தமிழில் வெளியான 'நள தமயந்தி' படத்தில் நடித்த கீது மோகன்தாஸ், இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை நவம்பர் 7ஆம் தேதி வெளியிட படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளனர்.