சென்னை: தயாரிப்பாளர்களின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அதிருப்தி அடைத்துள்ள திரையரங்க உரிமையாளர்கள், ஏலே என்ற திரைப்படம் வெளியிட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதனை கண்டிக்கும் விதமாக தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா கால சிரமங்களை கடப்பதற்கு முன்பே திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் பலவிதமான இன்னல்களை தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து அடுக்கப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக விபிஎஃப், வெளிப்படத்தன்மை, வசதி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு தயாரிப்பாளர்கள் போராடி வரும் நிலையில், அவை எவற்றுக்கும் தீர்வு எட்டப்படவில்லை.
திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்கு தயாரிக்கப்படுகின்றவே தவிர, திரையரங்குகளுக்கு இரையாக்குவதற்கு அல்ல. ஓடிடி மூலம் நேரடியாக படங்களை வெளியிட்டு மக்களை சென்றடைய முடியும் என்ற நிலை ஏற்பட்டபோது, கடன்சுமையை தவிர்க்க தயாரிப்பாளர்கள் அதை தேர்ந்தெடுத்தபோது திரையரங்க உரிமையாளர்கள் அபயக் குரல் எழுப்பினர்.
ஓடிடியில் நல்ல லாபம் கிடைத்தபோதும் சில தயாரிப்பாளர்கள் திரையரங்குகளில் தங்களது படங்களை வெளியிட்டனர்.
அதே தயாரிப்பாளர் தனது நஷ்டத்தைப் போக்க திரைப்படம் வெளியாகி 14ஆவது நாள் ஓடிடியில் வெளியட முடிவு செய்த போது வாய்க்கு வந்தபடி திட்டி, தண்டமும் வைத்தார்கள்.
இந்த நிலையில், வரும் 12ஆம் தேதி 'ஏலே' படத்தின் தயாரிப்பாளர் தன்னை மட்டும் காக்க நினைக்காமல், திரையரங்குகளும் வாழ வேண்டும் என்று கோடி ரூபாய் வரை செலவழித்து படத்தை வெளியிட முற்படுகிறார். ஆனால் இன்று திரையரங்க உரிமையாளர்களோ பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும் அதை தவிர்த்துவிட்டு தயாரிப்பாளர்கள் 30 நாள்கள் வரை ஓடிடியில் வெளியிடமாட்டேன் என்று கடிதம் கொடுத்தால்தான் படங்களை வெளியிடுவோம் என தன்னிச்சையாக முடிவெடுத்து நெருக்கடி கொடுக்கிறார்கள்.
சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என நினைக்க வேண்டாம். தயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்படங்கள் இல்லை என்பதை அவர்களுக்கு நியாபகப்படுத்த விரும்புகிறோம்.
'ஏலே' திரைப்படம் யார் தடுத்தாலும் மக்கள் சென்றடையும். திரையரங்க உரிமையாளர்கள் தங்களது எதேச்சதிகாரத்தை முற்றிலும் தவிர்த்தால் தான் கலைத்துறை மீளும் அதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை.
இனி அதை துரிதப்படுத்த தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் செயல்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா பிப்.18இல் தொடக்கம்