விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்தாண்டு வெளியான '96' தமிழ் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் 90களில் பள்ளிகளில் நடந்த காதல் பற்றியும், பின்னாளில் பிரிந்த அந்த பள்ளி காதலர்கள் சந்திப்பு குறித்தும் அழகாக விவரிக்கப்பட்டிருக்கும். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் பாடல்களும் படத்தை மேலும் பிரபலமடையச் செய்தது.
தமிழ் மொழியில் மட்டுமே வெளியான இத்திரைப்படம் தெலுங்கு, கன்னட சினிமா ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து கன்னடத்தில் 99 என்ற பெயரில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. கன்னட நடிகர் கணேஷ், மற்றும் பாவனா நடித்திருந்த இப்படத்தை பீரித்தம் கப்பி இயக்கியிருந்தார்.
![96 remake](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4609116_96t.jpg)
இந்நிலையில், 96 திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தெலுங்கு நடிகர் சர்வானந்த் மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த மார்ச் மாதம் முதல் ஷூட்டிங் நடைபெற்றது.
தற்போது இந்த படம் குறித்த புதிய செய்தி ஒன்று கசிந்துள்ளது. அது என்வென்றால் 96 திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக பள்ளிப்பருவ காதலர்களின் கதாபாத்திரம் இடம்பெற்றிருக்கும். எனவே இளைய சமந்தாவாக நடிக்க புதுமுக நடிகையை தேடினர். எனினும் கதைக்கு ஏற்ற நடிகை கிடைக்காத காரணத்தினால், தமிழில் இளைய திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் தெலுங்கிலும் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தெலுங்கு ரசிகர்களை குஷியடைச் செய்துள்ளது. காரணம் 96 தமிழ் திரைப்படத்தில் திரிஷாவின் பள்ளிப்பருவ வேடத்தில் நடித்திருந்த கௌரி கிஷன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது வரை அவரை ரசிகர்கள் ஜானுவாக கொண்டாடுகின்றனர். இனி தெலுங்கிலும் அவருக்கு ஒரு ரசிகர் படை உருவாக வாய்ப்பு அமைத்திருக்கிறது.
![96 remake](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4609116_96.jpg)
கடந்த ஜூன் மாதம் தாய்லாந்தில் ஒரு சண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் சர்வானந்த் காயமடைந்தார். இதைத் தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் ஹைதராபாத்தில் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியதாகவும், சர்வானந்த் மற்றும் சமந்தா ஆகியோர் அதில் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது.
மேலும் ஒன்றிரண்டு வாரங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு செய்யப்படும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் படத்தின் ரீலீஸ் தேதி குறித்து இன்னும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.