சென்னை: மஞ்சு மனோஜ் - ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் 'அஹம் பிரம்மாஸ்மி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
தெலுங்கு சினிமா ரசிகர்களால் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் மஞ்சு மனோஜ் புதிய படத்துக்கு 'அஹம் பிரம்மாஸ்மி' என தலைப்பிடப்பட்டுள்ளது.
![Aham Brahmasmi shooting begins](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6320245_aham-bramhasmi-1st-look.jpg)
இந்தப் படம் அழுத்தமான கதையுடன் நேர்த்தியான வடிவத்தில் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. படத்தில் மஞ்சு மனோஜூக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் 'அஹம் பிரம்மாஸ்மி' படத்தை இயக்குநர் ஶ்ரீகாந்த் ரெட்டி இயக்குகிறார்.
இதையடுத்து தெலுங்கு சினிமாவின் மெகா பவர் ஸ்டார் ராம்சரண் படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு க்ளாப் அடிக்க படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. முதல் காட்சியை பேபி நிர்வாணா இயக்கினார்.
தெலுங்கு சினிமாவின் பிரபல ஆளுமைகளான மோகன் பாபு, பருசேரி கோபாலகிருஷ்ணா திரைக்கதை பிரதியை படைப்பாளிகளிடம் தந்தனர்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் விபூதி அணிந்து வித்தியாச தோற்றத்தில் நகைப்பு, ரௌத்திரம், அமைதி என மூன்று பாவனைகளை வெளிப்படுத்தியிருந்தார் மஞ்சு மனோஜ். பல மொழிகளில் இவரது படம் வெளியாகி இருப்பதால், 'அஹம் பிரம்மாஸ்மி' மீது தெலுங்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தன் காதல் மனைவி பிரணிதி ரெட்டியை பிரிவதாக அறிவித்தார் மஞ்சு மனோஜ். அப்போது இனி ரசிகர்கள் விரும்பும் விதமாக சிறந்தப் படங்களை தேர்வு செய்து நடிப்பதாகக் கூறியிருந்த அவர், தற்போது தனது புதிய படத்தின் பணிகளில் இறங்கியுள்ளார்.