இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனின் மகளும் பிரபல பாடகியுமான தீ, பாடகர் 'தெருக்குரல்' அறிவு இருவரும் இணைந்து பாடி சமீபத்தில் வெளியிட்ட சுயாதீனப் பாடல் 'எஞ்சாயி எஞ்சாமி'. பூர்வக்குடி மக்கள், இயற்கை வளம் குறித்து அறிவு எழுதி, இருவரும் இணைந்து பாடியிருக்கும் இந்தப் பாடல், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்து, பாராட்டுகளைக் குவித்துவருகிறது.
முன்னதாக அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் திரைத் துறை பிரபலங்கள் பலரும் இப்பாடலை வெகுவாக ரசித்துப் பாராட்டிவருகின்றனர். எஆர். ரஹ்மான் சுயாதீன கலைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட மாஜா தளத்தின் தயாரிப்பில் முதல் பாடல் இது வெளியானது.
தற்போது இந்தப் பாடல் யூ-ட்யூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. பலரும் இந்தப் பாடலை விரும்பி தொடர்ந்து கேட்டுவருகின்றனர்.