கரோனா பரவல் இன்னும் தீராத நிலையில், திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளைப் பயன்படுத்த தமிழ்நாடு அரசு நேற்று (ஜன. 05) அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்தது. இதற்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும், மருத்துவர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி கொடுத்ததற்குப் புதுச்சேரி மருட் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்துள்ளார். அதில், ”டியர் விஜய் சார், சிலம்பரசன் சார் மற்றும் மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசு. நான் சோர்வாக இருக்கிறேன். நாங்கள் அனைவரும் சோர்வாக உள்ளோம். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் சோர்வாக உள்ளனர்.
இந்த நோய்ப் பரவலைத் தடுக்க நாங்கள் அனைவரும் கடுமையாக வேலை செய்கிறோம். எங்கள் வேலையைப் பெருமைப்படுத்தி நான் சொல்லவில்லை. பார்ப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாகவும், தெரியவில்லை. எங்களுக்கு முன்பு கேமராக்கள் இல்லை. நாங்கள் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது இல்லை. நாங்கள் கதாநாயகர்களும் இல்லை. ஆனால் எங்களுக்கும் மூச்சுவிட நேரம் வேண்டும். சிலரின் சுயநலம், பேராசைக்காக நாங்கள் பலிகடா ஆக விரும்பவில்லை.
பெருந்தொற்று இன்னும் முடியவில்லை. இந்த நோயால் இன்னும் மக்கள் உயிரிழந்துகொண்டுதான் இருக்கிறார்கள். திரையரங்குகளில் 100 விழுக்காடு பார்வையாளர்களை அனுமதிப்பது தற்கொலைக்குச் சமம்.
உயிருக்குப் பணத்தை வியாபாரம் செய்கிறார்கள். நாம் நம் வாழ்க்கையில் கவனம் செலுத்தி, இந்தப் பெருந்தொற்றிலிருந்து வெற்றிகரமாக மீண்டுவர முயற்சிக்கலாமா? மெதுவாக அணையும் தீயை மீண்டும் தூண்டிவிட வேண்டாமே.
அது இன்னும் முழுதாக அணையவில்லை. நாம் ஏன் இன்னும் ஆபத்தில் இருக்கிறோம் என்பதை அறிவியல் ரீதியாக விளக்க நினைத்தேன். ஆனால் என்ன பயன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: திரையரங்குகளில் 100% இடங்களுக்கு அனுமதி - மருத்துவர்கள் சங்கம் கண்டனம்