பிரபல இயக்குநர் அனுபவ் சின்ஹா இயக்கத்தில், நடிகை தப்ஸி பன்னு நடிப்பில், கடந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வெளிவந்த பாலிவுட் திரைப்படம் ’தப்பட்’.
குடும்ப வன்முறை குறித்து பேசிய தப்பட்
திருமண உறவில் துணைவரின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்து பேசிய இந்தத் திரைப்படத்தின் இரண்டு ட்ரெய்லர்கள் அப்போது வெளியாகின. இதில் இரண்டாம் ட்ரெய்லரில், திருமண உறவில் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில், ட்ரெய்லரை அதிக அளவு ரிப்போர்ட் செய்யுமாறு தப்சி கோரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
நீக்கப்பட்ட ட்ரெய்லர்
இதனைத் தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் அப்போது பலராலும் பலமுறை ரிப்போர்ட் செய்யப்பட்டு, யூ டியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், அதிக முறை இப்படத்தின் ட்ரெய்லர் மீது புகார் அளிக்கப்பட்டதற்காக கேன்ஸ் லயன்ஸ் சில்வர் விருதை இப்படம் தற்போது வென்றுள்ளது.
இயக்குநர் ட்வீட்
இது குறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் இயக்குநர் அனுபவ் சின்ஹா, ”தப்பட் திரைப்படத்தின் ட்ரெய்லர் மீது ரிப்போர்ட் செய்யும்படி கோரி நாங்கள் மேற்கொண்ட விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. இது எங்கள் குழுவுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசு” என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு கேன்ஸ் விருதுகள் குழு தெரிவித்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, தப்பட் படத்தின் ட்ரெய்லர் குறித்து நான்கு லட்சம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 26 மணி நேரத்தில் இந்த ட்ரெய்லர் யூ டியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'தப்பட்' தாக்கம்: ராஜஸ்தான் காவல் துறை செய்த காரியம்