மும்பை: இணைய நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர், நான்கு வயது குழந்தை நடிகரை தவறான வார்த்தையில் திட்ட நினைத்தேன் என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
'தனு வெட்ஸ் மனு', 'ராஞ்சனா', 'நீல் பேட்டரி சன்னாட்டா' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்வரா பாஸ்கர். இவர் நடிகைகள் கரீனா கபூர், சோனம் கபூர் ஆகியோருடன் இணைந்து நடித்திருந்த 'வீர் டி வெட்டிங்' என்ற படம் கடந்தாண்டு வெளியானது.
சிறுவயது பெண் தோழிகள் மீண்டும் தங்களின் தோழியின் திருணமத்தில் இணையும்போது நடைபெறும் லூட்டிகளை மையமாக உருவாக்கப்பட்ட இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனிடையே நடிகை ஸ்வரா இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அப்போது அவர் விளம்பரப் படம் ஒன்றில் நடித்ததை நினைவுகூர்ந்தார். அந்த விளம்பரப்படத்தின் ஷூட்டிங்கின்போது, நான்கு வயது குழந்தை நடிகரான சிறுவன், தன்னை ஆன்ட்டி (Aunty) என அழைத்ததாகவும், அப்போது அவரை தகாத வார்த்தையால் திட்ட நினைத்ததாகவும் கூறினார். மேலும் குழந்தைகள் என்றாலே தீய சக்திகள்தான் என்றும் தெரிவித்திருந்தார். இந்தக் காணொலி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதைக் கண்ட ட்விட்டர்வாசிகள் உடனடியாக ஸ்வராவை வசைபாடத் தொடங்கினர். நடிகையின் இந்தப் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஸ்வரா எந்த வார்த்தைக்காக அந்தக் குழந்தையைத் திட்ட நினைத்தாரோ அதே ஆன்ட்டி என்ற வார்த்தையுடன் கூடிய #Swara_aunty என்ற ஹேஸ்டேக்கையும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.
பாலிவுட் பிரபலங்கள் பொதுநிகழ்ச்சிகளில் இதுபோன்று தேவையில்லாத சிக்கல்களில் மாட்டுவார்கள். தற்போது நடிகை ஸ்வராவும் அவ்வாறு சிக்கி ட்விட்டரில் ரசிகர்களின் கேலிக்குள்ளாகியுள்ளார்.