'இறுதிச்சுற்று' படத்துக்குப் பிறகு, சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் 'சூரரைப்போற்று'. இப்படத்தில் நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். நடிகர் சூர்யாவும், குனீத் மோங்காவும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
'ஏர் டெக்கான்' என்ற விமான நிறுவனத்தின் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட படமாக 'சூரரைப் போற்று' தயாராகியுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி நேரடியாக வெளியாகும் என அறிவித்திருந்தது.ஆனால் அமேசான் ப்ரைமில் இம்மாத வெளியீட்டு திரைப்படங்கள் வரிசையில் 'சூரரைப்போற்று' இடம்பெறவில்லை. இதனால் இப்படம் இம்மாத இறுதியில் வெளியாகுமா அல்லது தாமதம் ஆகுமா என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் சில காட்சிகள் இந்திய விமானப்படையைக் குறித்து அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பட வெளியீட்டிற்கு இந்திய விமானப்படை தரப்பிலிருந்து சான்றிதழ் வேண்டும்.ஆனால் இந்திய விமானப்படையிலிருந்து இன்னும் தடையில்லாத சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழ் கிடைத்தவுடன் விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.