சேலம்: அதிகாலையில் வெளியான 'தர்பார்' படத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்பார்' திரைப்படம் முதல் காட்சி அதிகாலையில் சேலத்தில் திரையிடப்பட்டது. இதையடுத்து முதல் காட்சியைக் காண ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் திரையரங்குகள் முன்பு திரண்டனர்.
ரஜினிகாந்தின் உருவம் தாங்கிய பாதகைகளை மேள தாளம் முழங்க ஊர்வலமாக திரையரங்க வாசலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடியதுடன் முதல் காட்சியைக் காண திரையரங்கில் நுழைந்தனர்.
இந்தப் படத்தில் ரஜினிகாந்த் தோன்றும் ஆதித்யா அருணாச்சலம் என்ற கேரக்டர்போல் உடை அணிந்து வந்திருந்த ரசிகர் ஒருவர், உற்சாகமாக நடனமாடினார்.
சேலம் மாநகரில் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் ஐந்து திரையரங்குகள் உள்ளிட்ட நகரைச் சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
காலை முதல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் 'தர்பார்' படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து தர்பார் வெளியாகும் திரையரங்குகள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தர்பார்' படத்தை லைக்கா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். நயன்தாரா, நிவேதா தாமஸ், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு இசை - அனிருத். ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். நீண்ட நாட்களுக்குப் பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி இந்தப் படத்தில் தோன்றுகிறார். ரஜினி படங்களுக்கே உண்டான மாஸ் ஆக்ஷன் காட்சிகள், பஞ்ச் வசனங்களுடன் அமைந்திருந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதையடுத்து படத்தின் ரிலீஸை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.