சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள அரண்மனை - 3 திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பானது சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நேற்று (அக். 10) நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, கதாநாயகிகள் ராஷி கண்ணா, சாக்க்ஷி அகர்வால், இயக்குநர் சுந்தர். சி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் சுந்தர். சி பேசுகையில், “அரண்மனை 1, 2 ஆகிய படங்கள் ரசிகர்களின் ஆதரவுடன் பெரும் வெற்றிபெற்றது. தயாரிப்பாளராக எனக்கு அரண்மனை லாபகரமான படங்கள். பெரும்பாலான நடிகர்கள் 80 விழுக்காடு பணத்தை முதலிலேயே வாங்கிவிடுவர். அவ்வாறில்லாமல் தயாரிப்பாளர்களுக்கான நடிகராக இருப்பவர் நடிகர் ஆர்யா.
உடல் நலம் குறித்துப் பேசிய விவேக்
அரண்மனை 3 படத்தின் கிளைமாக்ஸ் காட்சி 15 நாள் படமாக்கப்பட்டது. அப்போது கண்ணில் லென்ஸ் அணிந்து, கயிற்றில் தொங்கியபடி ஆர்யா அதில் நடித்தார். நடிகர் விவேக் திடீரென இறப்பார் என எதிர்பார்க்கவே இல்லை. படப்பிடிப்பின்போது உடற்பயிற்சி, உடல் நலம் குறித்து எங்களுக்கு அறிவுறுத்தியபடியே இருப்பார்.
வெள்ளிக்கிழமை டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், திங்கள்கிழமை டப்பிங்கில் சில மாறுதல்களைச் செய்துதருவதாக விவேக் கூறினார். ஆனால் ஞாயிற்றுக்கிழமையே அவர் இறந்துவிட்டார். ஏ.சி. சண்முகம் பல திரைப்படங்களுக்கு வெளியில் தெரியாமல் உதவிவருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பிலும் உதவியிருந்தார்.
எளிய பொழுதுபோக்கு கலைஞன் நான், படத்தில் புரட்சிகர கருத்தைக் கூறுவதில்லை. பார்வையாளர்களை மகிழவைப்பதே எனது நோக்கம். விமர்சனத்தில் முழுக் கதையையும் எழுதிவிட வேண்டாம் என விமர்சகர்களுக்கு வேண்டுகோள்வைக்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: மூத்த கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்!