சென்னை தியாகராயநகரில் உள்ள பென்ஸ் பார்க் ஓட்டலில் நடிகர் சங்க நிர்வாகிகளின் அவசர செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பொன்வண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த அவசர செயற்குழுக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், குட்டி பத்மினி, ரமணா, ஸ்ரீமன், நடிகை சங்கீதா உள்ளிட்ட 24 பேர் கலந்து கொண்டனர்.
செயற்குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நாசர், நடிகர் சங்கத்திற்காக நடத்தப்பட உள்ள தேர்தலில் யார், யார் எந்தெந்த பதவிக்கு போட்டியிடுவார்கள் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் தேதியை தேர்தல் அலுவலர் அறிவிப்பார். அதற்காக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அலுவலராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதையடுத்து பேசிய பொன்வண்ணன், நடிகர் சங்கம் கட்டடத்தை கட்டுவது அடுத்த சில மாதங்களில் நிறைவடைந்து விடும் எனக் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் விஷால் இருவரும் கலந்துகொள்ளவில்லை. நடிகர் கார்த்தி, கோவாவில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதால் இந்தச் செயற்குழு கூட்டத்திற்கு வர இயலவில்லை என்று கூறப்படுகிறது.
சென்னையில் இருக்கும் விஷாலால் ஏன் வர முடியவில்லை என்ற கேள்வி நடிகர் சங்கத்தினரிடையே எழுந்துள்ளது.