நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்துள்ள படம் எனிமி. ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தை வினோத் குமார் தயாரித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால் திட்டமிட்டபடி தீபாவளிக்குப் படம் வெளியாகுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தீபாவளியன்று சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது. ரஜினி படம் என்பதாலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதாலும் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளும் அண்ணாத்த படத்தை திரையிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் விளைவாக மற்ற படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி எனிமி திரைப்படத்திற்கு 250 திரையரங்குகள் கூட கொடுக்காமல், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அரசியல் செய்வதாகப் படத்தின் தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட எனிமி பட தயாரிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ளார். அதில், "பெரிய படத்தை வெளியிட அனைத்து திரையரங்குகளுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வருகிறது. இது உண்மையா என்று தெரியவில்லை ஆனால் அப்படி இருந்தால் நான் அசோசியேஷனினிடம் கேட்க வேண்டிய நிலை ஏற்படும்.
இப்படத்திற்கு ஹாட் ஸ்டாரில் நல்ல விலை கேட்கப்பட்டும், திரையரங்கில் வெளியாக வேண்டும் என வந்துள்ளேன். சினிமாவிற்கு இது ஆரோக்கியமான விஷயம் அல்ல. தீபாவளி போன்ற பண்டிகை நாள்களில் 100 சதவீத இருக்கைகளுடன் நான்கு நாள்கள் படம் ஓடினாலே இருதரப்பினருக்கும் போதுமான பங்கு வந்துவிடும்.
எனக்கு 250 திரையரங்குகள் போதுமானது. அப்படிக் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு எதிராகக் கட்டாயம் போராடுவேன். கண்டிப்பாகத் தீபாவளிக்குப் படத்தை வெளியிடுவேன். அதற்குரிய திரையரங்குகள் கிடைக்கச் சங்கம் உதவி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருது வாங்கும் 'அண்ணாத்த' ரஜினி!