கரோனா பொது முடக்கம் காரணமாகப் பிற மாநிலங்களில் போக்குவரத்து வசதியின்றி தவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் திரும்ப, போக்குவரத்து வசதி செய்தகொடுத்து நற்பெயர் பெற்றவர், நடிகர் சோனு சூட்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி, அதன்மூலம் வழங்கிவருகிறார். கரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய நிகழ்வு குறித்து புத்தகம் ஒன்றையும் சோனு சூட் வெளியிட்டிருந்தார். இவரின் சேவையைப் பார்த்து காலா படத்தின் நடிகை ஹூமா குரேஷி, சோனு சூட் பிரதமர் ஆவதற்குச் சரியான நபர் எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சோனு சூட், “இந்தப் பெருமைக்கு நான் தகுதியான நபர் என்று அவர் நினைத்தால், தொடர்ந்து இந்தச் சேவையை இன்னும் நிறையச் செய்ய வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். இருப்பினும் அவர் சொன்னதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்போது ஒரு திறமையான பிரதமர் இருக்கிறார். பிரதமர் ஆகும் அளவுக்கு எனக்கு இன்னும் வயதுமில்லை, அனுபவமும் இல்லை. எனக்கு நடிப்பது மட்டுமே பிடிக்கும். எனக்கு அரசியலில் ஈடுபடும் அளவிற்கு அனுபவமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.