பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனம் கபூர் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இவர் 1985ஆம் ஆண்டு ஜுன் 9ஆம் தேதி மும்பையில் பிறந்தார். பாலிவுட்டின் ஃபேஷனிஸ்ட்டான சோனம் கபூர், பாலிவுட் நடிகர் அனில் கபூர், சுனிதா கபூர் தம்பதியினரின் மகளாவார்.
சினிமா தயாரிப்பாளராக இருந்த சுரீந்தர் கபூரின் பேத்தி. தயாரிப்பாளர் போனி கபூர், நடிகர் சஞ்சய் கபூர், சந்தீப் மார்வாவின் ஆகியோர்களின் சகோதரன் மகள். சோனம் கபூரின் உடன் பிறந்த சகோதரி ரியா, சகோதரர் ஹர்ஷவர்தன் ஆகியோர் ஆவர்.
இவர் கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார். பின் தனது சர்வதேச இளங்கலை படிப்பை மேற்கொள்ள தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய உலக கல்லூரியில் பதிவு செய்தார். பின்னர் மும்பை பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரத்தை பிரதானப் பாடங்களாக எடுத்துப் பயின்று பட்டம் பெற்றார். ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் சரளமாய் பேசக்கூடியவர், சோனம் கபூர்.
இவர் இந்திய மரபு, லத்தீன் நடனங்களில் வல்லவர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்களிலும் சோனம் கபூர் நடித்திருக்கிறார். ஒரு நடிகையாக தனது வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்னர், பாலிவுட்டின் சிறந்த இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.
மேலும் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய பிளாக் (2005) திரைப்படத்தில், அவருக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பன்சாலியின் 'சாவரியா' திரைப்படத்தின் மூலமாக நடிப்புலகுக்கு அறிமுகமானார்.
இந்தத் திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், பெரும்பாலான விமர்சகர்களிடம் இருந்து சோனம் கபூரின் நடிப்பு நல்ல விமர்சனத்தைப் பெற்றது.
சோனம் கபூர் 'டெல்லி 6' எனும் திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். வழக்கமான கதாநாயகி பாத்திரமாகவே இல்லாத ஒன்றில், அவர் சரவெடியாக, உள்ளுணர்வுடன், கேமரா பயமின்றி நடித்துள்ளார் என விமர்சகர் ராஜீவ் மசந்த், அவரை வெகுவாகப் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் தனுஷ் பாலிவுட் சினிமாவில் முதன்முறையாக கதாநாயகனாக நடித்த 'ராஞ்சனா’ திரைப்படத்தின் கதாநாயகியாக சோனம் கபூரே நடித்தார். 2013ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் சோனம் கபூரின் நடிப்பை தமிழ் ரசிகர்களுக்கும் கொண்டு வந்து சேர்த்தது.
இந்தப்படம் தமிழில் 'அம்பிகாபதி' எனும் பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியானது. அதுமட்டுமல்லாமல் சோனம் கபூர் பாலிவுட்டின் ஃபேஷனிஸ்ட்டாக இருப்பதால், 'ஆடைகளின் ராணி' எனவும் அழைக்கப்படுகிறார்.
2019ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில், சோனம் கபூர் அணிந்திருந்த ஆடையின் விலை மட்டும் கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் ஆகும். இதில் இருந்தே ஆடைகளின் மீது சோனம் கபூர் கொண்டுள்ள நாட்டத்தை அறிந்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட ஆடைகளின் ராணி சோனம் கபூரின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் #HBDSONAMKAPOOR என்ற ஹேஸ்டேக்கின் மூலம் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கி வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க : 'நா.முத்துக்குமார் கவிதைகளை, பாடல்களாக மாற்றிக் கொடுங்க...' - வசந்தபாலன்