பொதுவாக கருத்து சொல்லும் படங்கள் எனச் சொல்லி, சிலரால் வகைப்படுத்தப்பட்ட திரைப்படங்கள் அனைத்தும் கருத்தை மட்டும் முன்வைத்தோ அல்லது, தான் பேசும் பிரச்சினைக்கு சர்வலோக நிவாரணியான ஒரு தீர்வைத் தரும் பொருத்தே அமைந்திருக்கிறது.
ஆனால் ஒரு திரைப்படம் என்ன செய்ய வேண்டும்..?, ஒரு திரைப்படம் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கதாநாயகன் எல்லா பிரச்சினைக்கும் தீர்வு தருவான் என்பது போல் திரைப்படம் எடுப்பது, ஒரு வகையில் மக்களை முட்டாள் ஆக்கும் செயாலகத் தானே இருக்க முடியும்..?
ஆனால், சற்று யோசித்துப் பார்த்தால் நாம் கடந்த காலங்களில் அப்படிப் பொருள் தரும் படங்களைத் தான் சமூக அக்கறைக் கொண்டத் திரைப்படங்களாக கொண்டாடிருப்போம். அதற்காக வெறும் கலைப்படங்கள் மட்டும் தமிழ் சினிமாவை நிறப்ப வேண்டும் என்பது என் கருத்தல்ல.
ஜனரஞ்சக சினிமாக்கள் அவசியம் தேவை ,ஆனால் அவைகளை பொழுதுபோக்கு சினிமாக்களாகவே கருத வேண்டும். மாறாக அவைகளை சமூகப் படங்கள் என்று அணுகுவது சரியான முறையாக இருக்காது என்பது என் கூற்று.
‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’, இத்திரைப்படத்தை பற்றி பேசும் முன் இயக்குனர் வசந்த்தை பற்றி வெகுவாக கூற வேண்டும். தமிழ் சினிமாவில் ‘underrated' என்ற வார்த்தை இன்றைய சமூக வளைதள காலத்தில் ‘overrated' ஆன நிலையில் ஒரு சில படைப்பாளிகளுக்கு மட்டுமே அது சரியாக பொருந்திப் போகிறது.
வசந்தும் அதில் ஒருவர். இவரின் திரைமொழி நேர்த்திக்கு இவரின் முந்தைய படங்களே சான்று. இந்நிலையில், இத்திரைப்படம் இவரின் ‘master piece' என்றே சொல்லுவேன். திரைமொழியிலும், திரைக்கதையிலும், அனைத்து தொழில்நுட்ப அம்சங்களிலும் மிகச் சிறப்பு வாய்ந்தத் திரைப்படமாக உள்ளது.
இக்கதைப் பேசும் கருத்துகள் அல்லது பிரச்சினைகள் அனைத்தும் நாம் கண்டுகொள்ளாத ,அன்றாட வாழ்க்கையில் கடந்து போகிற விஷயங்கள் தான். நாம் எவ்வளவு சுலபமாக ஒரு ஆண் ஆதிக்கவாதியாக, அரக்கனாக வாழ்கிறோம் என்பதை இத்திரைப்படத்தை பார்க்கையில் உணர முடியும்.
இக்கதையில் வரும் ஒவ்வொறு பெண்ணும் நாம் கடந்து வந்த, நம் வாழ்வில் இருக்கிற, அல்லது நமக்கு தெரிந்தும் பெரிதும் கண்டுகொள்ளாத பெண்கள் தான். இப்படத்தில் வரும் எந்த கதாபாத்திரங்களும் கொடூர வில்லன்கள் இல்லை, இன்னும் சொல்லப்போனால் அவர்களை பொருத்தவரையில் அவர்கள் கெட்டவர்கள் கூட இல்லை.
ஆனால் அவர்கள் அவர்களாகவே இருப்பது எவ்வளவு கொடுமைகளை அவர்கள் சார்ந்த பெண்களுக்கு தருகிறது என்பது சற்று திகைப்பைத் தான் தருகிறது. வசனங்களில் அனைத்தையும் சொல்லாமல் சினிமாவை திரைவழிக் கலையாக ,சரியாக அணுகியுள்ளார் இயக்குனர்.
இத்திரைப்படம் ஒரு 'anthology' திரைப்படம். அதாவது பல குறும்படங்களின் தொகுப்பு. இதில் வரும் மூன்று கதைகளும் அசோக மித்திரன், ஆதவன் மற்றும் ஜெயமோகனின் கதைகளை தழுவி எடுக்கப்பட்டவை. மூன்று காலகட்டத்தில் நடக்கிறது, எல்லா காலக்கட்டத்திலும் நிறைய விஷயங்கள் மாறுகின்றன. வீட்டின் அமைப்பு, விஞ்ஞான வளர்ச்சி, வாழ்க்கை முறை, ஆனால் பெண்களின் நிலை மட்டும் மாறாமல் இருக்கிறது. இத்திரைப்படம், அனைவரையும் கண்டிப்பாக குற்ற உணர்ச்சிக்கு உண்டாக்கும்.