பூஜைக்கேத்த பூவிது
நேத்து தானே பூத்தது,,,,,
ஆம் ..தமிழ் திரையுலகில் சித்ரா பாடிய முதல் பாடல் இது. 1985ஆம் ஆண்டு இசைஞானி இளையராஜா இசையில் உருவான ‘நீ தானா அந்த குயில்’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலை சித்ரா பாடினார்.
சின்னக்குயில் சித்ரா
இந்த பாடலை எப்போது கேட்டாலும் நேற்று ரெக்கார்டிங் செய்தது போன்ற உணர்வு வரும். நீ தானா அந்த குயில் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய சித்ரா, ரசிகர்களின் மனதை கவர்ந்து சின்னக்குயில் சித்ராவாக மாறினார்.
இசை அறிமுகம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 1963ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பிறந்தவர் சித்ரா. கர்நாடக சங்கீதத்தை முறைப்படி கற்றுத்தேர்ந்த இவர், இசைத்துறையில் பிஏ இளங்கலை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்.
பள்ளி பருவத்திலேயே பாடகர் கே.ஜே ஏசுதாஸ் உடன் இணைந்து பாடும் வாய்ப்பை பெற்ற சித்ரா, 1979ஆம் ஆண்டு மலையாள இசை அமைப்பாளர் எம்ஜி ராதாகிருஷ்ணன் மூலம் திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பு பெற்று தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.
உன் கையில் என்னை கொடுத்தேன்
பின்னர், சித்ராவை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் இளையராஜா. புன்னகை மன்னன் திரைப்படத்தில் ‘ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், உன் கையில் என்னை கொடுத்தேன்’ என்ற பாடலை பாடியிருப்பார் சித்ரா. ஆம். தனது இசையை கொடுத்த சித்ராவை தமிழ்திரையுலகம் கைவிடவில்லை. அவர் பல மொழிகளில் பாடி இருந்தாலும் சித்ராவின் இமாலய வளர்ச்சிக்கு தமிழ் இசை உலகம் கை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும். இசைஞானி இசையில் அவர் பாடிய பாடல்கள் பெரும் ஹிட் என்பது அனைவரும் அறிந்ததே.
அதே படத்தில் இடம் பெற்ற ‘கால காலமாக வாழும் காதலுக்கு’, ‘சிங்களத்து சின்னகுயிலே’ போன்ற பாடல்கள் சித்ராவின் திறமைக்கு உதராணம் என கூறலாம்.
பூவே பூச்சூடவா
பூவே பூச்சூடவா என்ற பாடலில்
"அழைப்பு மணி ஓசை எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்"
என்ற வரி வரும்.
பேத்தியை எதிர்பார்த்து காத்திருக்கும் பாட்டியின் நிலையை கூறும் அந்தப்பாடலை மிகவும் உருக்கமாக பாடியிருப்பார் சித்ரா.
என்னை நீ கண்ட நேரம்...
அதேபோல் கீதாஞசலி என்ற படத்தில் இளையராஜாவுடன் இணைந்து பாடிய ‘ஒரு ஜீவன் அழைத்தது’ என்ற பாடலில்,
‘உன்னை நான் கண்ட நேரம்
நெஞ்சில் மின்னல் உண்டானது,
என்னை நீ கண்ட நேரம்
உந்தன் நெஞ்சம் துண்டானது’
என்ற வரிகள், கனவுலகில் வாழும் காதலர்களுக்கு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை. இதைப்போல் எண்ணற்ற பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இசைப்பயணம்
தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தி, பெங்காளி, ஒரியா, குஜராத்தி, துளு, பஞ்சாபி, ராஜஸ்தானி, உருது, சமஸ்கிருதம், படுகா மற்றும் சிங்களம், மலாய், அரபு, லத்தீன், ஆங்கிலம் ஃப்ரஞ்ச் என்று அயல்நாட்டு மொழிகளிலும் பாடல்களைப் பாடி தனக்கென தனி இசை சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவர் 'இந்தக்குயில்' சித்ரா.
இசையமைப்பாளர்கள்
இதேபோல் இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், கங்கை அமரன், சந்திரபோஸ், தேவா, வித்யாசாகர், எஸ் ஏ ராஜ்குமார், மரகதமணி, மணிஷர்மா, சிற்பி, பரத்வாஜ், ஆதித்யன், பாலபாரதி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் சித்ரா பணியாற்றியுள்ளார்.
தேசிய விருது
6 முறை தேசிய விருது பெற்ற சித்ரா, சிறந்த பின்னணிப் பாடகிக்கான "தமிழ்நாடு மாநில அரசு விருதை நான்கு முறை பெற்றவர். இதுபோல் எண்ணற்ற விருதுகளை வாங்கி குவித்துள்ளார். லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹால் லதாமங்கேஷ்கருக்குப் பின் இசை நிகழ்ச்சியில் பாடிய பெண் பாடகி சித்ரா ஒருவரே.
தனது பாடல்களால் நாள்தோறும் ரசிகர்களை மகிழ்வித்து வரும் சித்ராவின் பிறந்த நாளான இன்று ( ஜூலை 27) அவர் என்றும் ஆனந்தமாக வாழ வாழ்த்துகிறோம். HBD சித்ரா...!