ஹாலிவுட் பேண்டஸி திரைப்படமான 'ஃப்ரோசன் 2' நவம்பர் 22ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. இதன் தமிழ்ப் பதிப்பில் படத்தின் பிரதான கதாபாத்திரமான எல்சா கேரக்டருக்கு நடிகை ஸ்ருதிஹாசன் டப்பிங் கொடுத்துள்ளார். இதையடுத்து எல்சாவின் சகோதரி ஆனா கேரக்டருக்கு நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான திவ்யதர்ஷினி டப்பிங் பேசியுள்ளார். இதேபோன்று 'பிகில்' பட பாடலாசிரியர் விவேக், படத்தின் தமிழ் வசனங்கள் எழுதியிருக்கிறார். மேலும், படத்தின் மிகப் பிரபலமான ஓலஃப் கேரக்டருக்கு காமெடி நடிகர் சத்யன் பின்னணி குரல் தந்துள்ளார்.
முதல் பாகத்தைவிட இந்த பாகத்தில் மிரட்டும் விஷுவல்கள், வியக்கவைக்கும் திரைக்கதை என ஃபேண்டஸி உலகை ரசிகர்கள் கண்முன் கொண்டுவரும் விதமாக ஃப்ரோசன் 2 இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாராவில் நடைபெற்றது. இதில் ஸ்ருதிஹாசன், பாடலாசிரியர் விவேக், நடிகை தேவதர்ஷினி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு பேசினர். நடிகை ஸ்ருதிஹாசன் பேசுகையில், இந்த படத்தில் எனக்கு டப்பிங் பேசும் வாய்ப்பு வந்தபோது நான் மிகவும் வியந்தேன். ஏனென்றால் இந்த கதாபாத்திரம் அனைவருக்கும் ஒரு ரோல் மாடலான கதாபாத்திரம், அதற்கு நான் டப்பிங் வாய்ஸ் கொடுத்தது எனக்கு பெருமை. எந்த ஒரு பணி செய்தாலும் அர்ப்பணிப்போடு செய்வேன். இந்த படத்தில் டப்பிங்கை ஒரே நாளில் பேசி முடித்தேன்.
பொதுவாக எனக்கும் எனது தங்கைக்கும் நல்ல புரிதல் உள்ளது. அது ஒரு அற்புதமான ரிலேஷன்ஷிப். அதேபோன்றுதான் இந்தப் படத்தில் டிடிக்கும் எனக்குமான கெமிஸ்ட்ரி, மிக அழகாக அமைந்தது. அதனால் இந்த படத்தில் டப்பிங் மிகவும் நன்றாக வந்துள்ளது என்றார்.
இதையும் வாசிக்கலாமே: திரைத்துறையில் கால் பதிக்கும் ’போக்கிரி’ மகள் சித்தாரா!