'முனி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்த இப்படத்தில் ராஜ்கிரண், கோவை சரளா, வினுசக்ரவர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த த்ரில்லர் கதையுடன் உருவான இப்படம் அப்போது சுமாரான வரவேற்பை பெற்றது.
தற்போது 12 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ள 'காஞ்சனா 3' படத்தில் வேதிகா மீண்டும் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாவதால் நடிகை வேதிகா பயங்கர எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.
இந்நிலையில், தனது திரை அனுபவம் குறித்தும் 'காஞ்சனா 3' படத்தின் நடிக்க கிடைத்த வாய்ப்பு பற்றியும் வேதிகா மனம் திறந்து பேசியுள்ளார். இதில், 'நீண்ட இடைவெளிக்கு பிறகு லாரன்ஸ் மாஸ்டர் என்னை அழைத்தபோது நடனம் பற்றிய படமாக இருக்கும் என நினைத்தேன். மீண்டும் முனி படத்தின் நான்காம் பாகம் என்றதும் சற்று பயமாக இருந்தது.
ஆனால் இந்தப் படத்தில் நன்றாக நடித்துள்ளேன். 'காஞ்சனா 3' படத்தில் நடிப்பில் மிரட்டியுள்ளேன். அனைவரது பாராட்டையும் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. பாலா இயக்கத்தில் நடித்த பரதேசி, வசந்த பாலன் இயக்கத்தில் நடித்த 'காவியத் தலைவன்' படங்கள் எனக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. ஆனால், தமிழில் படவாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.
முனி படத்தில் நடித்தபோது எனக்கு 16 வயதுதான். அந்த படத்தில் நடிக்கும் அனுபவம் புதிதாக இருந்தது. நடிகைகளை மையப்படுத்தி அவர்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் குறைவுதான். அதனால் மலையாளம், கன்னட படங்களில் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
'காஞ்சனா 3' அடுத்து இந்தி படம் ஒன்றில் பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஸ்மியுடன் சேர்ந்து நடிக்க இருக்கிறேன். மலையாள இயக்குநர் ஜித்து ஜோசப் அப்படத்தை இயக்குகிறார். த்ரில்லர் கதையாக உருவாகும் அப்படம் எனது திரை வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது' என அவர் கூறினார்.