தன் பதின் பருவத்தின் பதினேழாம் வயதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது, மூன்று கேரள அரசாங்கத்தின் விருதுகள், தமிழ், கன்னட ஃபிலிம் ஃபேர் விருதுகள் என அத்தனை விருதுகளையும் வாரிக்குவித்து குழந்தைச் சிரிப்பும், எதார்த்தம் மிளிரும் நடிப்புத்திறனும் மாறாமல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாய் பிரகாசமாய் ஒளிர்ந்தவர். பதின் பருவத்தை முழுமையாகக் கடப்பதற்குள் 60க்கும் மேற்பட்ட தென்னிந்திய படங்களில் நடித்தவர். தமிழ் சினிமா கண்ட எதார்த்த நட்சத்திரம் மகாலட்சுமி மேனன் எனும் மறைந்த நடிகை ஷோபா.
'அடிப்பெண்ணே பொன் ஊஞ்சல் ஆடும் இளமை', 'செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்' போன்ற பாடல்களை எங்குக் கேட்டாலும், பாடலின் இசை, அதன் வரிகள், ஏன் தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் அடையாளமாகக் கொண்டாடப்படும் கதாநாயகனைத் தாண்டி நம் நினைவின் அடுக்குகளில் முதலில் எட்டிப் பார்ப்பது ஷோபாவின் எளிமை ததும்பும் முகமும், அந்த எதார்த்த சிரிப்பும்தான்.
தன் நான்காம் வயதில் ஜே. பி. சந்திரபாபு இயக்கிய "தட்டுங்கள் திறக்கப்படும்" எனும் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தாலும், தன் கலை உலக வாழ்வின் பெரும்பான்மைப் படங்களை ஷோபா, மலையாளத்திலேயே நடித்திருக்கிறார். ’ஏணிப்படிகள்’ படத்தில் நடிகையாக விரும்பும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த வேலைக்காரப் பெண்ணாக, வெகுளித்தனம் மாறாத இளமையோடு தன் பாத்திரத்தை அழகுறப் பதிவு செய்திருந்த நடிகை ஷோபாவினை, அந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றி, தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களிடம் அவரைக் கொண்டு சேர்த்தது. மிகக் குறைந்த காலகட்டத்திற்குள்ளேயே கே. பாலச்சந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா என தமிழ் சினிமாவில் போற்றப்படும் அத்தனை பெரிய இயக்குர்களின் தேர்வாகவும் ஷோபா ஜொலிக்கத் தொடங்கினார்.
பசி படத்திற்கு கலை உலக வாழ்வின் உச்சபட்ச விருதான தேசிய விருதினை வென்ற ஷோபா, முள்ளும் மலரும் படத்தில் அவர் நடித்திருந்த வள்ளி கதாபாத்திரம், காலத்தால் மறைக்க இயலாத பொக்கிஷங்களுள் ஒன்று.
mullum malarum shoba
அத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் தன் அண்ணன் காளிக்காக (ரஜினி) பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்து, காளியை சந்தித்தவுடன் தன் உற்சாகம் ததும்பும் கண்களால் நலம் விசாரித்து, காளியை வாரியணைத்து, தன் ஒற்றைக் கையை இழந்துவிட்டு காளி வீடு திரும்பியிருப்பதை, அடுத்த சில நொடிகளில் உணர்ந்து ஷோபா உடைந்து அழும் காட்சி அவரது நடிப்புக்கு சான்றுகளில் ஒன்று.
அதுமட்டுமின்றி, ரஜினிக்கு திருமணம் முடிந்து முதலிரவு காட்சி ஒன்று வரும். அப்போது அருகில் இருக்கும் பாட்டி ஒருவரது வீட்டில் இருக்கும் ஷோபா, ‘வீட்டுக்கு போறேன்’ என கையை அசைத்து அந்த பாட்டியிடம் ஷோபா கூறும் காட்சியில் எதார்த்தத்தின் உச்சத்தை அவர் அடைந்திருப்பார். அதுமட்டுமின்றி, அந்த ஒரு காட்சியில் வள்ளி என்பவள் வெகுளித்தனமானவள், அவளுக்கு அண்ணனைத் தவிர எதுவும் தெரியாது என்பதை ரசிகர்களுக்கு கடத்தியிருப்பார். இப்படி பல காட்சிகளில் ஷோபா தன்னை எதார்த்தமாக அத்திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருப்பார்.'
shoba
முக்கியமாக, திரையில் தன்னுடன் தோன்றுவது அன்றைய வளர்ந்துவரும், Screen presenceல் அன்று முதலே எவராலும் விஞ்ச இயலாத உச்ச நட்சத்திரமுமான ரஜினிகாந்தாகவே இருந்திருந்த போதிலும், திரையில் அவருடன் போட்டிப் போட்டு சரிக்கு நிகர் மிளிர்ந்தது அவரது சாதனை. இன்றளவும் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பப் படும்போது மாற்ற இயலாமல் ரஜினி எனும் ஆளுமையோடு சேர்ந்து மக்களை ஈர்த்துப் பிடித்துவைப்பது ஷோபாவின் நடிப்புத்திறனும், அவரது எதார்த்த அழகும்தான்.
’ஒரு எரி நட்சத்திரத்தைப் போன்றவர் ஷோபா’ என பாலுமகேந்திராவால் புகழப்பட்ட ஷோபாவை, அவரைத் தாண்டி திரையில் எவரும் பேரழகாய் பதிவு செய்ததில்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த பேருண்மை. ஏனெனில் மற்ற ஒளிப்பதிவாளர்கள் கேமரா லென்ஸை சாதாரண கண்களைக் கொண்டு ஷோபாவை படம்பிடித்தபோது, பாலுமகேந்திரா மட்டும்தான் அவரை காதல் கண்களோடு காட்சிப்படுத்தினார். அதனால்தான் ஷோபா இறந்து முப்பது வருடங்கள் கழித்தும் இன்றுவரை தேவதையாக வலம்வந்துகொண்டிருக்கிறார்.
shoba
பொதுவாக ஒரு நடிகரை தலைமுறைகள் கடந்து இளைஞர்கள் கொண்டாடுவார்கள். ஆனால் ஒருசில நடிகைகள் மட்டுமே தலைமுறைகள் கடந்தும் சோஷியல் மீடியா இளைஞர்களாலும் கொண்டாடப்படுகிறார்கள். அதில் முக்கியமானவர் ஷோபா. அவரை இன்றுவரை பல இளைஞர்கள் தேவதை எனவும், தேவதையின் நிழல் எனவும் கூறுகின்றனர் என்றால் அவரது முக்கியத்துவம் அப்படி. ஏனெனில் ஷோபாவின் அழகு என்பது எதார்த்தத்தை மீறாத, திகட்ட வைக்காத, ஆடம்பரமில்லாத எளிமையான அழகு. அந்த அழகுக்கு மட்டும்தான் ஆயுள் அதிகம் என்பதை அவர் இன்னமும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்.
shoba
இப்படி அவரின் எளிமையான அழகும், எதார்த்தமான பாவனைகள், காண்போரை தங்கள் வீட்டுப் பெண்ணாய் உணரவைத்த நடிப்பும்தான் அவரை தேவதை என்ற சொல்லுக்கு இன்னமும் பொருத்தமாக்கி வைத்திருக்கிறது. நடிகை என்றால் வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற மரபை உடைத்த புதுக்கவிதை அவர். இனி எத்தனையோ எதார்த்த நட்சத்திரங்கள் வரலாம், ஆனால் தமிழ் சினிமா மண் மீது விழுந்த அபூர்வ எரி நட்சத்திரம் ஷோபா.... வீ மிஸ் யூ தேவதையே