மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்றும், 18 வயதினைக் கடந்து முதன்முறையாக வாக்களிக்க வரும் வாக்களர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகின்றது.
விழிப்புணர்வுக் கூட்டங்கள், பிரசாரங்கள் என்று தங்களால் இயன்ற அளவு மக்கள் வாக்களிப்பதற்கு ஊக்கப்படுத்தி வருகிறது. இந்ந்தியா முழுவதும் ஆங்காங்கே வாக்களிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி சுவரோவியங்கள் வரையப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடியும் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பாலிவுட் பிரபலங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இதனையடுத்து நடிகர் ஷாருக்கான் தனது ரசிகர்களுக்கும் இந்திய மக்களுக்கும் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் ராப் சாங் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'பிரதமர் மோடி கூறியது எனக்கு தாமதமாகவே தெரிய வந்தது. ஆகவே விழிப்புணர்வு குறித்த வீடியோ வெளியிட தாமதமானது. ஆனால் நீங்கள் வாக்களிக்க தாமதப்படுத்தாதீர்கள்' என்று கூறியுள்ளார்.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாலிவுட் நடிகைகள் அலியா பட், தீபிகா படுகோனே, அனுஷ்கா சர்மா, நடிகர்கள் ரன்வீர் சிங், வருண் தாவண், ஷாருக்கான், ஆமீர் கான், சால்மான் கான் ஆகியோருக்கு பிரதமர் மோடி ஏற்கனவே ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.