பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு சொந்தமாக சேலத்தில் 3 தியேட்டர்கள் உள்ளன. நடிகர் சூர்யா நடித்த கஜினி உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்த ஏ.சந்திரசேகரன், இந்த 3 தியேட்டர்களை புதுப்பித்து திரைப்படங்களை திரையிட்டு நிர்வாகம் செய்ய முன் வந்தார். இதற்காக தியேட்டர்களை புதுப்பிக்க சுமார் ரூ. 5 கோடி செலவு செய்தார்.
இந்த தொகைக்கு உத்தரவாதமாக தியேட்டர்களுக்குரிய உரிமங்கள், கட்டட உறுதித்தன்மை சான்று, கட்டட திட்ட வரைப்படம், காப்பீட்டு பத்திரம், மின்வாரிய ஆய்வாளர் சான்று ஆகியவற்றின் அசல் ஆவணங்கள் சந்திரசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில் 3 தியேட்டர்களை அடமானம் வைத்து வங்கியில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாததால், வங்கி நிர்வாகம் தியேட்டர்களை கையகப்படுத்த முற்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. தியேட்டர்களை ஆஸ்கார் ரவிச்சந்திரன் மீண்டும் தன் வசம் ஆக்கிக் கொண்டார்.
இதற்கிடையில், தியேட்டர்களுக்கான உரிமம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதியுடன் முடிவடைந்ததால், உரிமத்தை புதுப்பிக்க தேவையான சான்றுகள் ஆஸ்கார் ரவிச்சந்திரனிடம் இல்லாததால், உரிமத்தை புதுப்பிக்க மாவட்ட ஆட்சியர் மறுத்து விட்டார். இதை எதிர்த்து நில நிர்வாக ஆணையரிடம் அவர் செய்த மேல்முறையீடும் தள்ளுபடியானது.
இதனால், சான்று நகல் கோரி சேலம் மின்வாரிய ஆய்வாளருக்கு உத்தரவிடவும், 3 தியேட்டர்களுக்கும் தற்காலிக உரிமம் கேட்டும் தனித்தனியாக வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தாக்கல் செய்தார். இதை எதிர்த்து சந்திரசேகரனும் வழக்கு தாக்கல் செய்தார். இந்த 2 வழக்குகளையும் விசாரித்த நீதிமன்றம், மின்வாரிய ஆய்வாளர் சான்றின் நகல் வழங்கவும், தியேட்டர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சந்திரசேகரன் தாக்கல் செய்த மேல்முறையீட்டை நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அமீது இஸ்மாயிலும், ஆஸ்கார் ரவிச்சந்திரன் தரப்பில் வழக்கறிஞர் சிங்காரவேலனும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்குகளை ஏற்று, தனி நீதிபதி பிறப்பித்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்தனர்.
மேலும், ஆவணங்கள் சந்திரசேகரனிடம் இருக்கும் போது, அதன் நகல்களை வழங்க உத்தரவிட முடியாது என்றும், அதனால் 3 தியேட்டர்களுக்கு வழங்கப்பட்ட மின்வாரிய ஆய்வாளர் சான்றின் நகலையும், 3 தியேட்டர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களையும் சேலம் மாவட்ட ஆட்சியர் உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை வரும் 20 ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது: கமல்ஹாசன் காட்டம்!