பாகுபலி திரைப்படத்தைத் தொடர்ந்து வரலாற்றுத் திரைப்படங்களில் தென்னிந்திய திரையுலகம் அதிக கவனம் செலுத்திவருகிறது. அந்த வகையில், மலையாளத்தில் சமீபத்தில் மேகன்லால், நிவின் பாலி நடிப்பில் வெளியான காயம்குளம் கொச்சுன்னி, சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய்சேதுபதி நடிப்பில் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான சைரா நரசிம்ம ரெட்டி, மம்மூட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் மாமாங்கம் உள்ளிட்ட வரலாற்று திரைப்படங்கள் நல்ல வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
பிருத்விராஜ் முதன்முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்த லூசிஃபர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதில், மோகன்லால், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், பிருத்விராஜ் நடித்திருந்தனர். தற்போது, லூசிஃபர் திரைப்படத்தைத் தொடர்ந்து வரலாற்று கதையம்சம் கொண்ட காளியன் என்ற படத்தில் பிருத்விராஜ் நடிக்க இருக்கிறார்.
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காஞ்சிரக்கோட்டு காளி என்ற வரலாற்று நாயகனின் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார். சிறந்த போர் வீரனாக இருந்து வரலாற்றின் சுவடுகளில் இருந்து மறைக்கப்பட்ட காளியன் வாழ்க்கை வரலாற்றை மையாமாக வைத்து இந்த படம் உருவாகிறது.
காளியன் திரைப்படத்தில் பாகுபலியில் கட்டப்பாவாக வந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
எஸ். மகேஷ் இயக்கும் இந்தப் படத்தை மேஜிக் மூன் நிறுவனம் சார்பில் ராஜீவ் நாயர் தயாரிக்கிறார். சஜித்வாசுதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே நடிகர் பிருத்விராஜ், தயாரிப்பாளர் ராஜீவ் நாயர் ஆகியோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.