நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைகிறார் என்று செய்திகள் பரவிய நிலையில், 'மகிழ்மதி' என்ற பெயரில் ஒரு இயக்கத்தை தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,“இந்தியாவில் ஓர் ஆண்டின் கணக்கின்படி பத்து மில்லியன் திருமணங்கள் நடைபெறுகின்றன. அந்தத் திருமண விழாக்களில் பரிமாறப்படும் முப்பது விழுக்காடு உணவு வீணாகின்றன.
உணவும் ஊட்டச்சத்தும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பது நியாயம் இல்லை. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கரோனா போன்ற தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டுமாயின், அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு தேவை.
அதை நிவர்த்தி செய்வதே இவ்வியக்கத்தின் லட்சியம். 'மகிழ்மதி’ இயக்கம் அரசியல் கட்சியோ, சாதி, மதம் சார்ந்த அமைப்போ கிடையாது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட ஒரு இயக்கம்.
கரோனா ஊரடங்கு நேரத்தில் வேலைகளுக்குச் செல்ல முடியாமல் வறுமையில் வாடும் குடும்பங்களுக்குத் தரமான உணவு வழங்குகிறோம். கரோனா நேரத்தில் மட்டும் இல்லாமல் இந்த இயக்கம் தொடர்ந்து அனைத்து நேரத்திலும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ளும். 'மகிழ்மதி இயக்கம்' என் கனவு.
என் இயக்கத்திற்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் வைக்க வேண்டும் என்று யோசித்தபோது, ’மகிழ்மதி’ என்ற பெயர் தோன்றியது. என் அம்மா பெயர் மகேஸ்வரி அவர் பெயரின் முதல் பாதியை என் இயக்கத்தின் பெயரில் இணைக்க வேண்டும் என்பது என் ஆசை'' என்று தெரிவித்துள்ளார்.