தெலுங்கு மெகா பவர் ஸ்டார் ராம்சரண் தேஜா, சமந்தா, ஆதி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்பில் வெளியான படம் 'ரங்கஸ்தலம்'. பிரபல இயக்குநர் சுகுமார் இயக்க, நம்மூர் ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
2018 மார்ச் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ரூ.60 கோடியில் எடுக்கப்பட்ட படம், ரூ.210 கோடி வசூலை அள்ளியது.
ஆந்திர மாநிலம் ரங்கஸ்தலம் என்னும் விவசாய கிராமத்தில் 1980ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது. சவுண்ட் இன்ஜீனியர் எனும் கேரக்டரில் சரிவர காது கேளாத கிராமத்து இளைஞரான ராம்சரண் தேஜா நடித்திருந்தார்.
ராம்சரண் தேஜா அடாவடி செய்து, பின்னர் காதலிக்கும் கதாபாத்திரத்தில் சமந்தா, மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படித்த கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்தில் ஆதி, கிராமத்து மக்களின் அறியாமையை பயன்படுத்தி 30 ஆண்டுகளாக ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வில்லத்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் ஜெகபதிபாபு, நல்ல அரசியல்வாதியாக தோன்றி மகள் விரும்பும் இளைஞனை ஆணவக் கொலை செய்யும் கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வாழ்ந்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் 'மங்கம்மா..மங்கம்மா' உட்பட அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தன.
ஆந்திரா, தெலங்கானா மாநில ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட ரங்கஸ்தலம், தற்போது தமிழில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை ஞானவேல்ராஜா தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார். "குடும்பத்துடன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் முழுமையான திருப்தியை தரும் என்றும், கோடை விடுமுறை விருந்தாக, 'ரங்கஸ்தலம்' படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.