தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் , தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான தொழிலாளர்கள் ஊதிய உயர்வு , பணிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்த பொதுவிதிமுறைகள் குறித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெறும். அந்த வகையில் 7 ஆண்டுகள் கழித்து ( 2017 பிறகு ) 2022-2025ம் ஆண்டுகளுக்கான பேச்சுவார்த்தை கடந்த சில மாதங்களாக சுமுகமான முறையில் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
புரிந்துணர்வு பொதுவிதிமுறைகள் ஒப்பந்தம்
இதுகுறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இணைக்கப்பட்டுள்ள 23 சங்கங்களுக்கும் , தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையேயான திரைப்பட வழிகாட்டுதல் புரிந்துணர்வு பொதுவிதிமுறைகள் ஒப்பந்தத்தில் , நேற்று(மார்ச்.9) புதன்கிழமை அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் , மற்றும் 23 சங்கங்களின் நிர்வாகிகள் இணைந்து கையொப்பமிட்டார்கள் .
இந்த ஊதிய உயர்வு மற்றும் பொதுவிதிமுறைகள் அனைத்தும் 10.03.2022 முதல் 09.03.2025 வரை 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் . தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் மேற்படி புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சம்பளத் தொகையினை மட்டுமே படப்பிடிப்பின் போது அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் .
புதிய ஊதிய உயர்வு குறித்த விவரத்தை சங்கத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் . மேலும், நடைபெறும்போது மேற்படி ஊதிய உயர்வு பொதுவிதிகள் குறித்து ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினைத் தொடர்பு கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும் , கூடிய விரைவில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் விதிமுறைகள் புத்தகமாய் அச்சிட்டு அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சிம்புவின் ‘கொரோனா குமார்’ படத்திற்கு சிக்கல்!