சென்னை: ஒயிட் லேம்ப் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ”சாயம்”. விஜய் விஷ்வா கதாநாயகனாக நடித்துள்ள இந்தப்படத்தில் சைனி கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின் மற்றும் பலர் நடித்துள்ளனர். சலீம், கிறிஸ்டோபர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார்.
சாதி சாயத்தால் திசைமாறும் வாழ்க்கை
முத்து முனுசாமி படத்தொகுப்பை கவனித்துள்ளார். யுகபாரதி, விவேகா, அந்தோனிதாசன், பொன் சீமான் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
படிக்கும் மாணவர்கள் மீது சாதி சாயம் பூசுவதால் அவன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சாலிகிராமத்திலுள்ள பிரசாத்லேப்பில் இன்று (செப். 11) நடைபெற்றது.
விழாவில் படக்குழுவினருடன், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சினிமாவில் சாதி, மதம்?
திரைப்படத்தின் இசை தகட்டினை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வெளியிட, பட தயாரிப்பாளர் குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
அப்போது விழா மேடையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், “இன்றைக்கு வெற்றியை கொடுப்பவன்தான் ஜாம்பவான். துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுங்கள், அதுவே உயர்ந்த இனமாகும்.
சினிமாவில் மட்டும்தான் யாரும் ஜாதி, மதம் பார்ப்பதில்லை. இந்த திரைப்படத்தில் சமூகம் சார்ந்த சிந்தனை இருக்கு, நிச்சயமாக வெற்றி பெறும்.
விஜயின் விண்ணப்ப படிவத்தில் ’ட்விஸ்ட்’
அரசு சார்பில் சுமார் 100 திரையரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் குறைந்த விலைக்கு டிக்கெட் விற்றால் சிறிய தயாரிப்பாளர்களுக்கு சிறப்பானதாக இருக்கும். கலைஞர் இருக்கும்போதே அரசு சார்பில் திரையரங்கம் கட்டித்தர திட்டமிட்டிருந்தார்.
அவர் சினிமாமீது அதிக காதல் கொண்டிருந்தார். சுமார் 40வருடங்களுக்கு முன்பு விஜயை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதி, மதம் என்ற இடத்தில் ”தமிழன்” என பூர்த்தி செய்தேன். இன்றும் தொடர்ந்து அப்படியேதான் சான்றிதழ் இருக்கிறது.
இதுபோன்று அனைவரும் தம்முடைய வாழ்வில் ஜாதி ஒழிய நடந்துகொள்ள வேண்டும். பள்ளியில் ஜாதி என்ற முத்திரையை ஏன் குத்துகிறார்கள்?. ”தமிழன்” என்றுதான் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் செயல்படுத்தினால் ஜாதியை ஒழித்து விடலாம். சமூக மாற்றத்திற்கான படமெடுப்பதால் மட்டும் ஜாதி ஒழியாது” என்றார்.
இதையும் படிங்க: திருமண பந்தத்தில் 15 ஆண்டுகள் - நட்சத்திர தம்பதிக்கு திருமண நாள்