மாஸ்கோ: சிறந்த திரைப்படங்களுக்கும், திரையுலகில் சிறந்து விளங்குவோருக்கும் ரஷ்யா சார்பில் வழங்கப்படும் கோல்டன் ஈகிள் விருதுக்கு மூன்று ஹாலிவுட் படங்கள் தேர்வாகியுள்ளன.
ரஷ்யாவிலுள்ள நேஷனல் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் சார்பில் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு கோல்டன் ஈகிள் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்கர் விருதுக்கு சமமானதாக இந்த விருதுகள் கருதப்படுகின்றன.
இதையடுத்து இந்த ஆண்டு ஹாலிவுட்டில் சக்கைபோடு போட்ட படங்களான தி லயன் கிங், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட், கிரீன் புக் ஆகிய மூன்று படங்கள் சிறந்த அயல்நாட்டு படப்பிரிவில் தேர்வாகியுள்ளன.
மியூசிக்கல் பேண்டஸி படமான தி லயன் கிங், ரஷ்ய பாக்ஸ் ஆபிஸில் 46.7 மில்லியன் டாலர்களை வசூலித்து டாப் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக குவெண்டின் டாரன்டினோ இயக்கிய ’ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்’ 19 மில்லியன் டாலர்கள் வசூலித்து 12ஆவது இடத்திலும், 9.2 மில்லியன் டாலர்கள் வசூலித்து கிரீன் புக் படம் 23ஆவது இடத்திலும் உள்ளன.
இந்த மூன்று படங்களும் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற நாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வரும் ஜனவரி 24, 2020இல் மாஸ்கோ மாஸ் ஃபிலிம் ஸ்டுடியோவில் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த படத்துக்கான கோல்டன் ஈகிள் விருதுகள் அளிக்கப்படவுள்ளன.