தமிழ்சினிமாவில் முக்கிய நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் இந்த அசாதாரண சூழ்நிலையில் தனது பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.கே. சுரேஷ் கூறுகையில், "தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று பல்வேறு தளங்களில் பயணத்தைத் தொடங்கி தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த நான் இயக்குநர் பாலாவால் 'தாரை தப்பட்டை' படத்தில் அழுத்தமான கதாபாத்திரம் மூலம் நடிகராக அறிமுகமானேன். தற்போது மீண்டும் பாலாவின் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் தனக்கு ஒரு புதிய இலக்காக இருக்கும் .
அதுமட்டுமல்லாமல் 'வேட்டை நாய்' என்கிற படத்தில் கதாநாயகனாகவும் 'அமீரா' என்கிற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன் . தமிழ், மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் புதிதாக நான்கு படங்களில், வித்தியாசமான வேடங்கள் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.
தற்போது, தமிழ்நாட்டில் ஊரடங்கு நிலவுகிறது. இந்த காலத்தில் இவ்வாண்டு என் பிறந்தநாள் வருவது சற்று வருத்தமான விஷயம் தான். நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிக்கும் மனம் கொண்ட இளைஞர்களையெல்லாம் சந்திக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கொண்டாட்ட மனநிலையில் நான் இப்போது இல்லை. மீண்டும் சகஜ நிலை திரும்புவது ஒன்றுதான் அனைவருக்குமான கொண்டாட்டமாக இருக்கும்.
கரோனா முடிவுக்கு வந்து, நாட்டில் அமைதி திரும்பி, படப்பிடிப்புகள் வழக்கம் போல் தொடங்கப்படுவது ஒன்றுதான், எனக்கு உண்மையான கொண்டாட்டம்" என்று கூறினார்.