உலகம் முழுவதும் பெறும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் தொற்றால் பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக சினிமா படப்பிடிப்பு இல்லாத காரணத்தினால், திரைப்பட தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்று, ஃபெப்சி சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்தார். அக்கோரிக்கையை ஏற்று தமிழ்த் திரையுலகின் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் நிதியுதவி வழங்கினர்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே. செல்வமணி, ”உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகளே திணறி வருகின்றன.
பொதுமக்களும் இந்த வைரஸ் நோயின் வீரியத்தை உணர வேண்டும். மேலும் ஊரடங்கு காரணமாக வேலை நிறுத்தப்பட்டதால், ஃபெப்சி சார்பாக திரைப்படத் தொழிலாளர்களுக்கு நிதியுதவி கேட்டிருந்தோம். தற்போது வரை 2 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதியும், 2,400 மூட்டைகள் அரிசியும் நன்கொடையாக வந்துள்ளன.
இதனை ஃபெப்சி சார்பாக திரைப்படத் தொழிலாளர்கள், அனைவருக்கும் பகிர்ந்தளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில் அரசுக்கு திரைப்படக் கலைஞர்கள் நிதி வழங்க முன்வர வேண்டும். ஃபெப்சி சார்பாக தமிழ்நாடு அரசுக்கு ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி வழங்குகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: மது கிடைக்காத விரக்தி - தூக்க மத்திரை சாப்பிட்ட 'ஆச்சி' மகன்!