சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், சிறை விதிகளின்படியும், நன்னடத்தை அடிப்படையிலும் வரும் 2021 ஜனவரி 27ஆம் தேதி சசிகலாவின் தண்டனை காலம் முடிய இருப்பதால், அவருக்கு விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்திற்கான நான்கு வரைவோலைகள் பெங்களூருவில் உள்ள 34ஆவது நகர உரிமையியல் நீதிமன்றத்தில் நவம்பர் 17ஆம் தேதி தாக்கல்செய்யப்பட்டன.
இதற்கிடையில், டோலிவுட் சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மா சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படம் எடுக்கப்போவதாகவும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் முன்பே படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து ராம்கோபால் வர்மா தனது சமூக வலைதளப்பக்கத்தில், ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகாலவும் அருகில் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, "சசிகலா என்கிற திரைப்படத்தை இயக்கவுள்ளேன். எஸ் என்கிற பெண்ணும் ஈ என்கிற ஆணும் ஒரு தலைவரை என்ன செய்தார்கள் என்பது பற்றிய கதை இது. தமிழ்நாட்டின் தேர்தலுக்கு முன் திரைப்படம் வெளியாகும்.
அந்தத் தலைவியின் பயோபிக் வெளியாகும் அதே நாளில் இந்தப் படமும் வெளியாகும். லக்ஷ்மியின் என்.டி.ஆர். படத்தின் தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டிதான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இந்தத் திரைப்படம், ஜெ, எஸ், டி, ஐ, ஓ, ஈ ஆகியோருக்கு இடையே இருந்த சிக்கலான சதிகள் நிறைந்த உறவைப் பற்றிய கதை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.