கடந்த ஒரு வார காலமாக அக்னி தேவி படம் குறித்து பல்வேறு சர்ச்சைகளை நடிகர் பாபி சிம்ஹா எழுப்பியிருந்தார். இந்நிலையில் ‘அக்னிதேவி’ திரைப்படம் 300 க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தில் மதுபாலாவின் வில்லி கதாபாத்திரம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டஇந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா ஒப்பந்தம் செய்யப்பட்டார். படப்பிடிப்புத் தளத்தில் பாபி சிம்ஹா பல்வேறு விதங்களில் படக்குழுவினருக்கு தொந்தரவு கொடுத்த நிலையிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. இந்நிலையில் படத்தில் நடிக்காமல் பாதியிலேயே நடிகர் பாபி சிம்ஹா வெளியேறியுள்ளார்.
இந்நிலையில், இயக்குநரும் இணைத் தயாரிப்பாளருமான ஜான், மற்ற கதாபாத்திரங்களை வைத்து கதையை மெருகேற்றி, ரசிகர்களுக்குப் பிடிக்கும் வகையில் படமாக்கியுள்ளார். டப்பிங் பேச வராமல் முரண்டு பிடித்த பாபி சிம்ஹாவால் மொத்தப் பணமும் முடங்கும் அபாயம் ஏற்பட்டதால், வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேச வைத்து ரிலீஸுக்குத் தயாரானபோது, படம் வெளிவரக் கூடாது என்று புகார் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று அக்னி தேவி படம் குறித்த விசாரணைக்காக நடிகர் பாபி சிம்ஹா அழைக்கப்பட்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாபி சிம்ஹா ஆணவ போக்குடன் பேசியதால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா என்று தயாரிப்பாளர் சங்கம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.