பாலிவுட் இளம் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் ரன்வீர் சிங். மிகவும் துடிப்புடனே எப்போதும் காணப்படும் இவர் ரசிகர்களுடன் மிகவும் இணைக்கமாக இருந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எந்வொரு பொது நிகழ்ச்சிக்கு சென்றாலும் ரசிகர்களுடன் இணைந்து நடனம் ஆடுவது, பாடுவது, செஃல்பி எடுப்பது என அனைவரையும் குதூகலப்படுத்தி அந்த சூழலை மிகவும் மகிழ்ச்சி மிக்கதாக மாற்றுவார்.
இதையடுத்து தற்போது 'கல்லி பாய்' என்ற படத்தில் தெருக்களில் ராப் பாடல் பாடும் இளைஞராக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஆலியா பட், கல்கி கோச்சலின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸோயா அக்தர் படத்தை இயக்கியுள்ளார். வரும் 14-ம் தேதி படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், புதுவிதமான பேஷன் ஆடைகளை விற்பனை செய்யும் இணையத்தளமான லவ்ஜென், கல்லிபாய் குழுவினருடன் இணைந்து கல்லிஜென் என்ற புதுமையான ஆடையை உருவாக்கியுள்ளது.
இதையடுத்து இந்த ஆடையை அணிந்து ராப் பாடல் பாடி மகிழ்வித்த ரன்வீர் சிங், ஒரு கட்டத்தில் மிகவும் குஷியாகியுள்ளார். இதைத்தொடர்ந்து உற்சாக மிகுதியில் அங்கு கூடி பார்த்து ரசிகர்கள் மீது மேடையிலிருந்து திடீரென தாவி குதித்தார். இதனையடுத்து அவரை ரசிகர்கள் பலராக கைதாங்களாக பிடித்தனர். இதில் சில ரசிகர்கள் காயமடைந்தனர். ரன்வீர் சிங்கின் இந்தச் செயலை சமூக ஊடகங்களில் பலரும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து அவர் கூறியதாவது, ரசிகர்களை மகிழ்விக்கதான் அப்படிச் செய்தேன். அது தவறாக போய்விட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.